விளாத்திகுளம் அருகே விபத்து; ஆட்டோ கவிழ்ந்து 7 மாணவர்கள் காயம்

விளாத்திகுளம் அருகே ஆட்டோ கவிழ்ந்து 7 மாணவர்கள் காயம் அடைந்தனர்.

Update: 2022-04-09 16:25 GMT
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே லோடு ஆட்டோ மோதியதில் பயணிகள் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 7 மாணவர்கள் காயமடைந்தனர்.

லோடு ஆட்டோ மோதி விபத்து
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில் உள்ள தனியார் உயர்நிலைப்பள்ளியில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். நேற்று மாலையில் பள்ளிக்கூடம் முடிந்ததும் வழக்கம்போல் மாணவ-மாணவிகள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர்.
அதன்படி பள்ளியில் இருந்து விளாத்திகுளம் அருகே கோடாங்கிபட்டியைச் சேர்ந்த சில மாணவர்களை ஏற்றி கொண்டு ஆட்டோ புறப்பட்டு சென்றது. விளாத்திகுளம் அருகே மகாராஜாபுரம் அருகில் சென்றபோது, புதூரில் இருந்து விளாத்திகுளத்துக்கு தண்ணீர் கேன் ஏற்றிச் சென்ற லோடு ஆட்டோ எதிர்பாராதவிதமாக பயணிகள் ஆட்டோவின் பின்புறம் மோதியது.

7 மாணவர்கள் காயம்
இதில் நிலைதடுமாறிய ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் அந்த ஆட்டோவில் இருந்த 7 மாணவர்கள் மற்றும் டிரைவரான செந்தில் ஆகியோர் காயமடைந்தனர். உடனே அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று, விபத்துக்குள்ளான ஆட்டோவில் இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக நாகலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
படுகாயமடைந்த மாணவர் சுவிஸ்குமாரை (வயது 11) மேல் சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரியிலும், டிரைவர் செந்திலை அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியிலும் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். 
இதுகுறித்து சங்கரலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லோடு ஆட்டோ டிரைவரான புதூரைச் சேர்ந்த முனியசாமியை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்