ஆலங்குடியில் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் ஆதரவு தெரிவித்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன

ஆலங்குடியில் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.

Update: 2022-04-09 16:17 GMT
ஆலங்குடி:
மறியல் 
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் பழைய நீதிமன்றம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையை மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒட்டுமொத்தமாக அந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று அம்பேத்கர் நகர் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தையடுத்து தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் அடுத்த கட்டமாக 9-ந்தேதி அனைத்துக்கட்சி, அம்பேத்கர் நகர் பொதுமக்கள் சார்பில் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தபோவதாக அறிவித்து இருந்தனர். 
பூட்டு போடும் போராட்டம் 
அதன்படி இன்று அம்பேத்கர் நகர், பாரதி நகர், கலிபுல்லா நகர் பொதுமக்கள், அனைத்து அரசியல் கட்சியினர் ஆலங்குடி அம்பேத்கர் நகரில் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதில், அ.தி.மு.க. பழனிவேல், பா.ஜ.க. முருகேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சொர்ணகுமார், நாம்தமிழர், எஸ்.டி.பி.ஐ., வி.சி.க., சி.பி.எம்.எல்., தே.மு.தி.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் ஆலங்குடியில் உள்ள டாஸ்மாக் கடையை இடம் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஏற்கனவே செயல்பட்டு வரும் 2 டாஸ்மாக் கடைகளை மூடக்கோரியும் கோஷம் எழுப்பினர். இந்த போராட்டத்திற்கு ஆலங்குடி அரசமரத்தடியில் இருந்து காமராஜர் சிலை வரை உள்ள கடைகள் அனைத்தையும் வணிகர்கள் அடைத்து ஆதரவு அளித்தனர்.  
சமரச ேபச்சுவார்த்தை 
இதையடுத்து தாசில்தார் செந்தில்நாயகி தலைமையில், மாவட்ட கலால்துறை அலுவலர் வரதராஜன், ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல், ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை, கீரமங்கலம் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தாசில்தார் அலுவலகத்தில் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில், 2 டாஸ்மாக் கடைகளையும் 4 மாதத்திற்குள் அப்புறப்படுத்துவதாக எழுத்துப்பூர்வமாக அதிகாரிகள் எழுதி கொடுத்தனர். 
பரபரப்பு 
மேலும் புதிய டாஸ்மாக் கடை திறப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது. ஆலங்குடி டவுனில் டாஸ்மாக் கடைகள் அறவே இருக்கக்கூடாது என்ற கோரிக்கையை பொதுமக்கள் முன் வைத்தனர். சமரச கூட்டத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் நகரைவிட்டு வெளியே வைப்பதற்காக 4 மாத கால அவகாசம் கேட்டு உறுதியளித்தனர். சமரச கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பொதுமக்கள், மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்