தண்ணீர் வீணாவதை தடுக்க கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரி வரை குழாய் மூலம் குடிநீர்
தண்ணீர் வீணாவதை தடுக்க கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டுவர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
ஊத்துக்கோட்டை,
பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னை நகரமக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றபட்டு வருகிறது.
கோடைக்காலங்களில் இந்த ஏரிகள் வறண்டு விடுவதால் சென்னையில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வந்தது. இதற்கு நிரந்தர தீர்வு காண தமிழக அரசு ஆந்திர அரசுடன் 1983-ம் ஆண்டு கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தை வகுத்தது. அதன்படி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்.
இதற்காக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரி வரை 177 கிலோமீட்டர் தூரத்துக்கு கால்வாய் வெட்டப்பட்டது. இந்த கால்வாய் ஆந்திராவில் 152 கிலோமீட்டர் தூரமும், தமிழகத்தில் 25 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. அதாவது தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கிலோ மீட்டர் தூரத்துக்கு கால்வாய் உள்ளது. 1984- ம் ஆண்டு கால்வாய் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு 1995-ம் ஆண்டு முடிக்கப்பட்டன. 1996-ம் ஆண்டு முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் கோடைகாலங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது. இதனை கருத்தில் கொண்டு ஊத்துக்கோட்டை அருகே உள்ள தேர்வாய் கண்டிகை , கண்ணன்கோட்டை ஏரிகளை ஒன்றிணைத்து ரூ.350 கோடி செலவில் புதிய அணைகட்டப்பட்டது. இந்த அணையில் 500 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது.
பூண்டி, புழல் உள்பட குடிநீர் வழங்கும் 5 ஏரிகளின் கொள்ளளவு 11. 757 டி.எம்.சி.யாக உள்ளது . இதில் குறிப்பாக கிருஷ்ணா நதிநீர் மூலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டிக்கு வந்து சேரும் தண்ணீரை கொண்டுதான் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை நிறைவேற்றப்படுகிறது. பொதுவாக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டால் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைக்குப்பம் ஜீரோ பாயிண்டை வந்தடை ய 7 நாட்கள் ஆகிறது. இங்கிருந்து 25 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள பூண்டிஏரியை சென்றடைய சில சந்தர்ப்பங்களில் 2 நாட்கள் ஆகிறது. இப்படி திறந்தவெளி கால்வாயில் பாய்ந்து வருவதால் 30 சதவீதம் தண்ணீர் ஆவியாகி விடுகிறது. மேலும் ஆந்திர விவசாயிகள் மின்மோட்டார்கள் கொண்டு தண்ணீர் திருடுவதால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைகிறது.
இதனை தடுக்கவும் கால்வாயில் நீர் செல்லும் வழியில் ஏற்படும் இழப்பு மற்றும் சட்டவிரோதமாக தண்ணீர் எடுப்பதை தடுக்க தமிழக அரசு சிறப்பு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி கண்டலேறு அணையில் இருந்து பூண்டிஏரி வரை 177 கிலோ மீட்டர் தூரத்துக்கு குழாய் வழியாக நீரை கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இப்படி கால்வாய் அமைத்தால் ஒரு சொட்டு தண்ணீர் கூட வீணாகாமல் சென்னைக்கு கொண்டு செல்ல முடியும். தற்போதுபூண்டி ஏரியில் இருந்து பேபி கால்வாய் வழியாக சென்னை குடிநீர் வாரியத்துக்கு குழாய் மூலம் தண்ணீர் அனுப்பப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் சென்னையில் நீர்வழங்கல் அதிகரிப்பு மற்றும் கால நிலை மாற்றத்தை தாங்கும் வகையிலான திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. அதன்படி திருவள்ளூர் அருகே உள்ள ராமன்சேரியில் புதிய அணைகட்ட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இப்படி சென்னை நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் 20.50 டி.எம். சி. கூடுதலாக சேமித்து வைக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கண்டலேறு முதல் பூண்டி ஏரி வரை குழாய் வழியாக நீரை கொண்டு செல்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டசபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வரும் நாட்களில் இதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் குழாய் வழியாக நீரை கொண்டு செல்வதற்கான சாத்திய கூறுகளை கண்டறிய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.