தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம்; அமைச்சர் சேகர்பாபு தகவல்

தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார்.

Update: 2022-04-09 16:02 GMT
தாடிக்கொம்பு:
தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஆய்வு மேற்கொண்டார். அதன்படி, திண்டுக்கல் அருகே ஜி.கோவில்பட்டியை அடுத்த மங்களப்புள்ளியில் உள்ள மங்களவல்லி தாயார் சமேத லட்சுமி நரசிம்மபெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, சுற்றுச்சுவர், கோவில் முகப்பு பகுதி போன்ற இடங்களில் கூடுதல் திருப்பணிகள் மேற்கொள்ள கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு அமைச்சர் சேகர்பாபு வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்த பிறகு, கோவில் வளாகத்தை சுற்றி பார்த்தார். பின்னர் அவர் கூறுகையில், தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. எனவே இந்த கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் செய்வதற்காக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பணிக்காக நிதி ஒதுக்கீடு குறித்து நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியாகும் என்றார்.
இந்த ஆய்வின்போது கலெக்டர் விசாகன், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், தாடிக்கொம்பு பேரூராட்சி தலைவி கவிதா சின்னத்தம்பி, துணைத்தலைவர் நாகப்பன், அவைத்தலைவர் சுப்பையா, அகரம் பேரூராட்சி தலைவர் நந்தகோபால், துணைத்தலைவர் ஜெயபால், தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவில் செயல் அலுவலர் மாலதி மற்றும் தி.மு.க.வினர், இந்துசமய அறநிலையத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்