திருத்தணி முருகன் கோவிலில் தரிசன டிக்கெட் வழங்காமல் மோசடி; கோவில் ஊழியர் பணியிடை நீக்கம்
திருத்தணி முருகன் கோவிலில் தரிசன டிக்கெட் வழங்காமல் மோசடியில் ஈடுப்பட்ட கோவில் ஊழியரை பணியிடை நீக்கம் செய்து கோவில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
திருத்தணி,
திருத்தணியில் முருகனின் அறுபடை வீடுகளில் 5-ம் படை வீடான கோவில் மலைமேல் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பொதுவழியில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இலவசமாக அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் வசதிக்காக ரூ.100, ரூ.150 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு விரைவு தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 6-ந் தேதியன்று மலைக்கோவிலில் கோவில் ஊழியர் பாண்டு ரூ.100 தரிசன கட்டணம் வழங்கும் பணியை செய்தார். அப்போது குடியாத்தம் கிருபானந்தம் என்பவர் ரூ.100-க்கான கட்டண தரிசன வழியில் வந்த தன்னுடன் வந்த 12 நபர்களுக்கும் சேர்த்து ரூ.100 வீதம் ரூ.1,300 -ஐ கோவில் ஊழியர் பாண்டுவிடம் வழங்கி அதற்கான கட்டணச் சீட்டு வழங்கும்படி கோரியுள்ளார். அதற்கு ஊழியர் பாண்டு ரூ.1,000 மட்டும் பெற்றுக்கொண்டு கட்டணச்சீட்டு வழங்காமல், கிருபானந்தம் மற்றும் அவர்களுடன் வந்த 12 பேரையும் தரிசனத்திற்கு செல்லுமாறு அனுப்பி வைத்துள்ளார்.
கிருபானந்தம் தரிசனம் முடிந்து மலைக்கோவிலில் பணியில் இருந்த உதவி ஆணையர் ரமணியிடம் சென்று கட்டணச்சீட்டு வழங்காமல் தரிசனத்திற்கு அனுப்பி வைத்த பாண்டு மீது புகார் செய்தார். இதனையடுத்து பாண்டு மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி இணை ஆணையர் பரிந்துரை செய்தார். அவர் பரிந்துரையின் பேரில் கோவில் ஊழியர் பாண்டுவை பணியிடை நீக்கம் செய்து கோவில் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.