மார்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவியை ஆபாச படமெடுத்த வழக்கில் ராணுவ வீரர் கைது
மார்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
குழித்துறை,
மார்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டிய வழக்கில் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கல்லூரி மாணவி
மார்த்தாண்டம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 19 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர் ஓய்வு நேரங்களில் மாத ஏலச்சீட்டு நடத்தி வந்தார். அந்த ஏலச்சீட்டில் மாணவிக்கு நஷ்டம் ஏற்பட்டது. இதனால், மாணவி கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இடைக்கோடு பகுதியை சேர்ந்த சஜித் (வயது30) என்ற ராணுவ வீரரிடம் உதவி கேட்டார். சஜித் அந்த மாணவிக்கு பண உதவி செய்ய முன் வந்தார்.
அதைத் தொடர்ந்து அவர்கள் போனில் பேசி வந்தனர். அதன்மூலம் அவர்களுக்குள் நெருக்கம் ஏற்படவே அவர்கள் வாட்ஸ் அப் மூலம் கருத்துகளை பகிர்ந்து வந்தனர். ஒரு கட்டத்தில் அந்த மாணவியை சஜித் ஆபாச படம் எடுத்துள்ளார். அதை வைத்து அந்த கல்லூரி மாணவியை சஜித் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
போலீசார் வழக்கு
அத்துடன் மாணவியின் ஆபாசப் படங்களை தனது நண்பர்களுக்கும் பகிர்ந்துள்ளார். அவரது நண்பர்களும் கல்லூரி மாணவிக்கு மிரட்டல் கொடுக்க தொடங்கினர். இதனால் அச்சமடைந்த மாணவி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் பேரில் சஜித் மற்றும் அவரது நண்பர்கள் ஜான் பிரிட்டோ (33), மற்றொரு ராணுவ வீரர் கிரீஷ் (29), விபின் ஜான் (32) ஆகிய 4 பேர் மீதும் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ராணுவ வீரர் கைது
இந்த வழக்கில் ஜான் பிரிட்டோ, விபின் ஜான் ஆகிய 2 பேரையும் போலீசார் ஏற்கனவே கைது செய்தனர். ராணுவ வீரர்களான சஜித், கிரீஷ் ஆகிய 2 பேரும் தலைமறைவாக இருந்து வந்தனர்.
அவர்களில் சஜித்தை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மற்றொரு ராணுவ வீரரான கிரீஷை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.