கிணத்துக்கடவு ரெயில்வே சுரங்க பாதையில் அத்துமீறும் கனரக வாகனங்களால் ஆபத்து

கிணத்துக்கடவு ரெயில்வே சுரங்க பாதையில் அத்துமீறும் கனரக வாகனங்களால் ஆபத்து ஏற்பட்டு உள்ளது.

Update: 2022-04-09 15:12 GMT
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு ரெயில்வே சுரங்க பாதையில் அத்துமீறும் கனரக வாகனங்களால் ஆபத்து ஏற்பட்டு உள்ளது. 

ரெயில்வே சுரங்கபாதை

கிணத்துக்கடவு சுடுகாட்டு பகுதி வழியாக கோதவாடி இம்மிடி பாளையம் உள்ளிட்ட பல கிராமத்துக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை இடையே பொள்ளாச்சி -கிணத்துக்கடவு அகல ரெயில் பாதை செல்கிறது. இந்த பகுதியில் குறுகலான சுரங்கபாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக குறிப்பிட்ட சில வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும். தற்போது இந்த சாலை வழியாக சில கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இந்தப் பகுதியில் குறுகலான பாதையில் அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் சிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த சாலை வழியாக தேங்காய் மட்டைகளை ஏற்றி வந்த லாரி குறுகலான பாலத்திற்கு செல்ல முடியாமல் திணறி கடும் சிரமத்துக்கு இடையே பாலத்தை கடந்து சென்றது. 

விதிமீறும் லாரிகள்

அப்போது. அந்த சாலையில் தேங்காய் மட்டைகள் சிதறி கிடந்தன. இதனால் இந்த சாலை வழியாக இரவு நேரங்களில் பயணம் செய்த பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- குறுகலான சுரங்கபாதை சாலையில் கனரக வாகனங்கள் செல்ல முடியாது என தெரிந்தும் சிலர் வேண்டுமென்றே வாகனங்களை இயக்கி வருகின்றனர். குறுகலான பாலத்திற்குள் கனரக வாகனங்கள் செல்லக்கூடாது என ரெயில்வே துறையினர் இரும்பு தடுப்புகள் வைத்தும், விதிமுறைகளை மீறி லாரி டிரைவர்கள் சிலர் இந்த வழியை கனரக வாகனங்களில் பாரம் ஏற்றி கடந்து செல்ல முயற்சித்து வருகின்றனர்.  இதனை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குறுகலான வழியில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்