டாப்சிலிப் வனக்கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி

டாப்சிலிப் வனக்கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி வழங்கப்பட்டது.;

Update: 2022-04-09 15:12 GMT
பொள்ளாச்சி

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் 18 வனக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் மலைவாழ் மக்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதாரம் மேம்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப் வனக்கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் பெண்களுக்கு சுய தொழில் பயிற்சி தொடக்க விழா நடைபெற்றது.
இதற்கு புலிகள் காப்பக துணை இயக்குனர் கணேசன் தலைமை தாங்கி, பயிற்சியை தொடங்கிவைத்தார். மாநில திட்டக்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் தறி மூலம் கால் மிதி தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது உதவி வன பாதுகாவலர் செல்வம், வனச்சரகர் காசிலிங்கம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி படித்த மலைவாழ் பெண்கள் தறி மூலம் கால் மிதி தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கால் மிதி அழியக்கூடிய பொருள் என்பதால் வீடுகளுக்கு அதன் தேவை எப்போதும் இருக்கும். இதன் மூலம் சுயமாக தொழில் செய்து மலைவாழ் பெண்கள் தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள முடியும். சுற்றுலா பயணிகளுக்கு எந்த மாதிரி, எந்த வண்ணத்தில் கால் மிதி வேண்டும் என்பதை கேட்டு, அதை உடனடியாக செய்து கொடுக்க முடியும். கால் மிதி தயாரிக்க தறி வாங்கி கொடுக்கப்பட்டு உள்ளது. எருமபாறை, கூமாட்டி, கோழிகமுத்தி வனக்கிராமங்களில் உள்ள பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்