கோட்டூர் வாரச்சந்தை கட்டிட பணிகள் மீண்டும் தொடக்கம்
‘தினத்தந்தி'யில் செய்தி வெளியானதை தொடர்ந்து கோட்டூர் வாரச்சந்தை கட்டிட பணிகள் மீண்டும் தொடங்கியது. இதற்கிடையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள், வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
பொள்ளாச்சி
‘தினத்தந்தி'யில் செய்தி வெளியானதை தொடர்ந்து கோட்டூர் வாரச்சந்தை கட்டிட பணிகள் மீண்டும் தொடங்கியது. இதற்கிடையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள், வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
நிதி ஒதுக்கீடு
பொள்ளாச்சி அருகே கோட்டூரில் வாரந்தோறும் புதன்கிழமை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. சந்தைக்கு கோட்டூர், ஆனைமலை, காளியாபுரம், பொன்னாலம்மன் துறை, கம்பாலப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதை தவிர வியாபாரிகளும் தங்களது பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.
இந்த நிலையில் சந்தை வளாகத்தில் இருந்த கடைகள் பழுதடைந்து மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது. இதனால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இதையடுத்து விவசாயிகள், வியாபாரிகள் வாரச்சந்தையில் புதிதாக கடைக்ள கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று வாரச்சந்தையில் கடைகள் கட்டுவதற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் தொடங்கியது.
பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
இதற்கிடையில் கடந்த சில மாதங்களாக பணிகள் மேற்கொள்ளாததால் செடிகள் வளர்ந்து இருந்தது. இதுகுறித்து ‘தினத்தந்தி'யில் கடந்த மாதம் 23-ந்தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதை தொடர்ந்து மீண்டும் பணிகள் மேற்கொள்ள பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி வளர்ந்து இருந்த செடிகளை அகற்றி விட்டு மீண்டும் கட்டிட பணிகள் தொடங்கி உள்ளது. மேலும் பணிகளை விரைந்து முடிக்கவும், அதே நேரத்தில் தரமானதாக மேற்கொள்ள ஒப்பந்ததாருக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள், வியாபாரிகள் கூறுகையில், கோட்டூர் வாரச்சந்தையில் தற்போது மீண்டும் பணிகளை தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அதே நேரத்தில் பணிகளை விரைந்து முடித்து கடைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சந்தை வளாகத்தில் மது அருந்துவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.