சமரச தீர்வு மையம் குறித்த விழிப்புணர்வு பேரணி

விழுப்புரத்தில் சமரச தீர்வு மையம் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி தொடங்கி வைத்தார்.

Update: 2022-04-09 14:45 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்குகள் தேங்குவதை தவிர்க்கவும், உரிய நேரத்தில் நீதி கிடைக்கவும் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளில் எளிதாக தீர்வு காணவும் லோக் அதாலத் என்று அழைக்கப்படுகின்ற மக்கள் நீதிமன்றம் பொதுமக்களுக்கு எளிதில் தீர்வு காண உதவுகிறது.
இந்த மையம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமசர தீர்வு சம்பந்தமாக விழிப்புணர்வு கண்காட்சி, கலை நிகழ்ச்சி மற்றும் பேரணி நடைபெற்றது.
விழுப்புரம் சட்டப்பணிகள் பாதுகாப்பு கட்டிடத்தில் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு கண்காட்சியை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா தொடங்கி வைத்து பார்வையிட்டார். அதனை தொடர்ந்து விழுப்புரம் சமரச மக்கள் தீர்வு விழிப்புணர்வு பேரணியை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியில் பங்கேற்றார். இப்பேரணியில் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கோபிநாதன், விழுப்புரம் சட்டப்பணிகள் பாதுகாப்புக்குழு தலைவர் சந்திரன், செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற அலுவலர்கள், பணியாளர்கள், விழுப்புரம் சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், போலீசார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

துண்டு பிரசுரம் வினியோகம்

இந்த பேரணியானது ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்டு நான்குமுனை சந்திப்பு வரை சென்று மீண்டும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முடிவடைந்தது. இதில் மாணவ- மாணவிகள் சமரச தீர்வு சம்பந்தமான விளம்பர பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர். மேலும் விழுப்புரம் செய்தி மக்கள் தொடர்புத்துறை மூலம் மக்கள் சமரச தீர்வு காண்பது சம்பந்தமான காணொலி வாகனமும் பேரணியில் பங்கேற்று வலம் வந்தது.

மேலும் செய்திகள்