திருவிழா நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கும் அதிகாரிகள்

கூடலூரில், அரசு அறிவித்தும் திருவிழா நடத்த அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Update: 2022-04-09 14:26 GMT
கூடலூர்

கூடலூரில், அரசு அறிவித்தும் திருவிழா நடத்த அதிகாரிகள் கட்டுப்பாடுகளை விதிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர். 

கட்டுப்பாடுகள் நீக்கம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அதில் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை கோடை என்ற வசந்த காலம் நிலவுகிறது. இந்த காலத்தில் பெரிய கோவில்கள் முதல் சிறிய கோவில்கள் வரை திருவிழாக்கள் களைகட்டுவது வழக்கம். 

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டு இருந்தது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து விட்டது. இதனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கி தமிழக அரசு அறிவித்தது. 

வழிபாட்டு உரிமைகள்

ஆனாலும் கூடலூர் பகுதியில் உள்ள கோவில்களில் திருவிழாக்கள் நடத்த வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் தொடர்ந்து கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். அரசு உத்தரவிட்டும் கட்டுப்பாடுகளை அதிகாரிகள் தொடர்ந்து கடைபிடித்து பொதுமக்களின் வழிபாட்டு உரிமைகளை பறிப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. 

இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, கோவில்கள் மட்டுமின்றி எந்த சமய நிகழ்ச்சிகள் நடத்தவும் அதிகாரிகள் அனுமதி வழங்குவதில்லை. அவ்வாறு அனுமதி வழங்கினாலும் சில மணி நேரம் மட்டுமே நடத்த வேண்டும் என்று கட்டுப்பாடுகளை விதிப்பது எந்த வகையில் நியாயம்?. எனவே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் அதிகாரிகள், போலீசார் தலையிடுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்