குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்களை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு
ஊட்டியில் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்களை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஊட்டி
ஊட்டியில் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்களை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு
நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகள் அதிகமாக உள்ளது. இதனால் சுற்றுச்சூழலை பாதுகாக்க குடிநீர் பாட்டில்கள் உள்பட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. குடிநீர் பாட்டில்களுக்கு மாற்றாக முக்கிய இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். எந்திரங்கள் அமைக்கப்பட்டது. சமீபத்தில் தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வந்தது. இந்தநிலையில் இன்று ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் குடிநீர் வழங்கும் எந்திரத்தை சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் பாரதிதாசன், சுப்பிரமணியன், சதீஷ்குமார், தண்டபாணி, பொங்கியப்பன், இளந்திரையன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இலவச குடிநீர்
மேலும் எந்திரத்தில் தண்ணீர் சரியாக வருகிறதா? என்று பார்த்து, குடிநீரை குடித்து அதன் தரத்தை ஆய்வு மேற்கொண்டனர். எந்திரத்தில் இலவச குடிநீர் என குறிப்பிட வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர். பின்னர் ஊட்டி அம்மா உணவகம் அருகே உள்ள குடிநீர் ஏ.டி.எம். எந்திரத்தில் 5 ரூபாய் நாணயத்தை செலுத்தி ஒரு லிட்டர் குடிநீர் சரியாக வருகிறதா? என்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் குடிநீரை குடித்து தரத்தை பரிசோதித்தனர். ஏ.டி.எம். எந்திரங்களில் குடிநீர் தடையின்றி பொதுமக்கள், சுற்றுலா பயணிகளுக்கு கிடைக்கவும், எந்திரங்களை முறையாக பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி ஆணையாளரிடம் நீதிபதிகள் தெரிவித்தனர். இதையடுத்து ஊட்டி வென்லாக் டவுன் வனப்பகுதியில் சோலை மரக்கன்றுகளை நீதிபதிகள் நடவு செய்து தண்ணீர் ஊற்றினர்.
இதையடுத்து தலைகுந்தா பகுதியில் காலி மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு மையத்தை நீதிபதிகள் திறந்து வைத்து பார்வையிட்டனர். அந்த வழியாக வரும் சுற்றுலா பயணிகளிடம் இருந்து பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கவும், வெளியிடங்களில் வீசப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அகற்றவும் மையம் அமைக்கப்பட்டது என்று நீதிபதிகளிடம், அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதுமலை
இதைத்தொடர்ந்து நீதிபதிகள் குழுவினர் மசினகுடி பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹூ, நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் மாவனல்லா அருகே லண்டனா களைச்செடிகள் அகற்றப்பட்ட பகுதி, தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம், அப்பர் கார்குடியில் களைச்செடிகள் அகற்றப்பட்ட இடம், கிளன்மார்கனில் களைச்செடிகள் அகற்றப்பட்ட பகுதி ஆகிய இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் முதுமலை புலிகள் காப்பகத்தின் செயல்பாடுகளை கேட்டறிந்தனர். ஆய்வின்போது முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், நீலகிரி வன கோட்ட அலுவலர் சச்சின், கூடலூர் வனக் கோட்ட அலுவலர் கொம்மு ஓம்காரம், ஆர்.டி.ஓ.க்கள் துரைசாமி, சரவணக்கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.