போலி அரசு அதிகாரி மீது குவியும் புகார்கள்

போலி அரசு அதிகாரி மீது குவியும் புகார்கள்

Update: 2022-04-09 13:56 GMT
கோத்தகிரி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஓரசோலை கிராமத்தை சேர்ந்தவர் மனோ(வயது 37). இவரது உறவினர் சிவராம்(30). இவர்கள் 2 பேரும், கடந்த 7-ந் தேதி டான்பாஸ்கோ செல்லும் சாலையில் காரில் சென்றனர். 
அப்போது அங்கு சாலையோரம் நின்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மற்றும் பத்திரிக்கை நிருபர் என போலி அடையாள அட்டையை காண்பித்து மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி இளைஞர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் மனோ மற்றும் அவரது கூட்டாளி சிவராம் ஆகியோர் மீது புகார்கள் குவிந்து வருகிறது. அவர்களிடம் பணத்தை பறி கொடுத்த இளைஞர்கள் கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வந்து செல்கின்றனர். 

நேற்று இரவு ஊட்டி அருகே தீட்டுக்கல் கிராமத்தில் 30 பேரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக தலா ரூ.50 ஆயிரம் மோசடி செய்ததாக மனோ மீது புகார் அளிக்க கோத்தகிரி போலீஸ் நிலையத்துக்கு வந்தனர். 

இதேபோன்று கோத்தகிரி பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் தங்களிடம் ரூ.1½ லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை மனோ மோசடி செய்துவிட்டதாக புகார் அளிக்க வந்தனர். அவருக்கு உடந்தையாக சிவராம் செயல்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் புகார் அளிக்க வந்தவர்களை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்குமாறு கூறி கோத்தகிரி போலீசார் அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்