தங்கும் விடுதிகளில் கட்டணம் அதிகரிப்பு
ஊட்டியில் கோடை சீசன் தொடங்கியதால் தங்கும் விடுதிகளில் கட்டணம் அதிகரித்து உள்ளது.;
ஊட்டி
ஊட்டியில் கோடை சீசன் தொடங்கியதால் தங்கும் விடுதிகளில் கட்டணம் அதிகரித்து உள்ளது.
தங்கும் விடுதிகள்
கோடை வாசஸ்தலமான நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ் பெற்றது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் களை கட்டி வருகிறது. வெளிமாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிந்து வருகின்றனர்.
இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகள், நட்சத்திர விடுதிகள், ஓட்டல்களில் ஓரிரு நாட்கள் தங்கி அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்து விட்டு செல்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோடை சீசனில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. இதனால் தங்கும் விடுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வராததால் வெறிச்சோடி காலியாக இருந்தது.
கட்டணம் உயர்வு
தற்போது கோடை சீசன் தொடங்கி நடந்து வருகிறது. சமவெளி பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரிப்பதால் பலர் தங்களது குடும்பத்தினருடன் ஊட்டிக்கு சுற்றுலா வருகின்றனர்.
அவர்கள் தங்கும் விடுதிகளில் வாடகை கட்டணம் வழக்கத்தை விட அதிகரித்து உள்ளது. இந்த சீசனில் அதிகம் பேர் வருவதால் இந்த கட்டணம் உயர்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஊட்டி தமிழ்நாடு ஓட்டலில் ஒரு நாள் அறை கட்டணம் ரூ.1,800-ல் இருந்து ரூ.2,700 ஆகவும், சிறப்பு வசதிகளுடன் கூடிய அறைக்கு ரூ.2,300-ல் இருந்து ரூ.3,000 ஆகவும், காட்டேஜ் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4,100 ஆகவும் அதிகரித்து உள்ளது.
ரூ.7 ஆயிரம் வரை...
அடுத்த மாதம்(மே) தற்போதைய வாடகை கட்டணத்தில் இருந்து ரூ.300 முதல் ரூ.500 வரை மேலும் உயர்கிறது. இதுதவிர ஊட்டியில் 500-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் உள்ளன. இங்கு ஊட்டிக்கு வருகிறவர்கள் தாங்கள் சுற்றுலா திட்டத்தின்படி முன்பதிவு செய்து அறைகளில் தங்குகின்றனர்.
வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுதி கட்டணம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரம் வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட அதிகமாகும். ஊட்டியில் தங்கும் விடுதிகளின் கட்டணம் பல மடங்கு உயர்ந்ததால் நடுத்தர சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.