போலீசார்- வியாபாரிகள் உறுதிமொழி ஏற்பு
எட்டயபுரத்தில் போலீசார்- வியாபாரிகள் புகையிலை தடுப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
எட்டயபுரம்:
எட்டயபுரம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்- வியாபாரிகள் நல்லுறவு கூட்டம் நடந்தது. இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது தலைமை தாங்கினார். கூட்டத்தில் போலீசார் வியாபாரிகளிடம் கூறுகையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்தல் மற்றும் விற்பனை செய்து தண்டனைக்குரிய குற்றம். ஆகையால் எட்டயபுரத்தில் உள்ள சிறு குறு வியாபாரிகள் அனைவரும் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளித்து சட்டங்களை பின்பற்றி நடக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். மேலும் வாகனங்களில் செல்லும்போது தலைக்கவசம் அணிதல், சாலை விதிகளை கடைபிடித்தல் உள்ளிட்ட விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர். தொடர்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட வியாபாரிகள் அனைவரும் சட்டத்திற்கு புறம்பாக புகையிலை பொருட்களை விற்க மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
கூட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பொன்ராஜ், முருகன், முத்து விஜயன், எட்டயபுரம் வர்த்தக சங்க தலைவர் ராஜா, துணைத்தலைவர் வெங்கடேஷ் ராஜா, செயலாளர் அய்யனார், வர்த்தகர்கள் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.