மரத்தின் மீது கார் மோதி கல்லூரி மாணவர் பலி
மரத்தின் மீது கார் மோதி கல்லூரி மாணவர் பலியானார். பேராசிரியர் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.
திருவலம்
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்.பி.ஏ. படித்து வந்த மாணவர் ஒருவருக்கு பிறந்த நாளாகும். அந்த மாணவரின் பிறந்தநாளை கொண்டாட கல்லூரி பேராசிரியர் தேவராஜ் (வயது 41), எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படிக்கும் சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியைச் சேர்ந்த சத்யநாராயணன் (24), அதே வகுப்பில் படிக்கும் மாணவர்களான அரவிந்த், கார்த்திபன், ருத்திரமூர்த்தி ஆகிய 5 பேரும் காட்பாடியில் இருந்து அம்முண்டி வழியாக திருவலம் நோக்கி வந்துள்ளனர்.
காரை பேராசிரியர் தேவராஜ் ஓட்டிச் சென்றுள்ளார். அம்முண்டி அருகே வரும்போது சாலை திருப்பத்தில் கார் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த ஒரு மரத்தின் மீது மோதியது. அதில் முன்னால் அமர்ந்திருந்த சத்யநாராயணன் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காரில் பயணம் செய்த மற்ற 4 பேரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினர். விபத்தில் பலியான சத்யநாராயணன் உடல் பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த விபத்து குறித்து திருவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.