வேலூரில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் தொழிலாளி பிணம்

வேலூரில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் தொழிலாளி பிணமாக கிடந்தார்.

Update: 2022-04-09 13:10 GMT
வேலூர்

வேலூர் கொசப்பேட்டை லால்சிங் குமந்தன் தெருவை சேர்ந்தவர் சந்தானம் (வயது 55), தொழிலாளி. இவர் மனைவி மற்றும் மகன், மகள்களை பிரிந்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். சந்தானம் கடந்த 6-ந் தேதி அப்பகுதியில் உள்ள ஓட்டலில் டிபன் வாங்கி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. வீடு பூட்டிய நிலையிலேயே காணப்பட்டது.
 
இந்த நிலையில்  அவருடைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று வீட்டின் கதவை திறக்க முயன்றனர். ஆனால் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அழுகிய நிலையில் சந்தானம் பிணமாக கிடந்தார்.

போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சந்தானம் 2 நாட்களுக்கு முன்பு உயிரிழந்திருக்கலாம். அவர் மாரடைப்பால் உயிரிழந்தாரா?, அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று தெரியவில்லை. பிரேத பரிசோதனைக்கு பின்னரே சந்தானம் உயிரிழப்பிற்கான காரணம் தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்