தேவை இல்லாமல் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை உடனடியாக அகற்ற டி.ஐ.ஜி. உத்தரவு

போலீஸ் நிலையங்களில் தேவையில்லாமல் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை உடனடியாக அகற்ற டி.ஐ.ஜி. ஆனி விஜயா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-04-09 11:44 GMT
வாணியம்பாடி

போலீஸ் நிலையங்களில் தேவையில்லாமல் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை உடனடியாக அகற்ற டி.ஐ.ஜி. ஆனி விஜயா உத்தரவிட்டுள்ளார்.

சாராய கும்பல்

வாணியம்பாடி நேதாஜி நகர், இந்திரா நகர், காமராஜர் நகர், லாலா ஏரி உள்ளிட்ட பகுதிகளில் சாராயம் விற்பனை செய்து வந்த கும்பலுக்கும், அப்பகுதி மக்களுக்கும் இடையே கடந்த மாதம் 6-ந் தேதி ஏற்பட்ட மோதலில் பொதுமக்கள் சாராய பாக்கெட்டுகளை சாலையில் கொட்டியும், சாராய விற்கப்படும் கொட்டகைக்கு தீ வைத்து எரித்தும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்‌. மேலும் அப்பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாராய முட்டைகளை கைப்பற்றி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அதைத்தொடர்ந்து சாராயம் விற்று வந்த 21 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சாராய வழக்கில் 6 முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, 80 வழக்கு நிலுவையில் உள்ள முக்கிய குற்றவாளியான மகேஷ்வரி மற்றும் அவரது கணவர் சீனிவாசன், அவர்களது உறவினர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

தாக்குதல் நடத்த திட்டம்

இந்தநிலையில், நேற்று வாணியம்பாடிக்கு வந்த டி.ஐ.ஜி. ஆனி விஜயா, சாராய கும்பலை சேர்ந்த முக்கிய குற்றவாளிகளை பிடிப்பது சம்பந்தமாக, வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது  தொடர்ந்து சாராயம் விற்கப்படும் தகவலை காவல்துறையினருக்கு தெரிவிக்கும் குடும்பங்களை குறிவைத்து மகேஸ்வரியின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

அதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்களை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியனுக்கு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்தார்.

பின்னர், வாணியம்பாடி தாலுகா போலீஸ் நிலையத்தில் டி.ஐ.ஜி. ஆனி விஜயா நிருபர்களிடம் கூறியதாவது:-

அகற்ற உத்தரவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ள தேவையற்ற வாகனங்கள் அனைத்தையும் விரைவில் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வாணியம்பாடி நியூடவுன் பகுதியில் பழுதடைந்துள்ள கட்டிடத்தில் இயங்கி வரும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் நிலையம் வேறு இடத்திற்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. 
இவ்வாறு அவர் கூறினார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன், வாணியம்பாடி  துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் பாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் பழனிமுத்து, ஜெயலட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்