பல்கலைக்கழக பஸ் மோதி 2 பேர் பலி - பொதுமக்கள் சாலை மறியல்
வண்டலூர் அருகே தனியார் பல்கலைக்கழக பஸ் மோதி 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
சென்னை ,
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அடுத்த மேல கோட்டையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 52). வாட்டர் சர்வீஸ் கடை வைத்து நடத்தி வந்தார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் உதய பிரகாஷ் (32), இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு கேளம்பாக்கத்தில் இருந்து வண்டலூர் நோக்கி தனித்தனியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். நல்லம்பாக்கம் கூட்ரோடு அருகே செல்லும்போது, பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பஸ் 2 மோட்டார் சைக்கிள்களின் பின்னால் பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிள்களில் வந்த ராமச்சந்திரன், உதயபிரகாஷ் இருவரும் பலத்த காயமடை ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய தனியார் பல்கலைக்கழக பஸ்ஸின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். மேலும் இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவு 2 மணியளவில் வண்டலூர்-கேளம் பாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.