தென்காசி நகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., பா.ஜனதா கவுன்சிலர்கள் வெளிநடப்பு
தென்காசி நகராட்சி கூட்டத்தில் ெசாத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க., பா.ஜனதா கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தென்காசி:
தென்காசி நகராட்சி அவசர கூட்டம் அதன் தலைவர் சாதிர் தலைமையில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெற்றது.
விவாதம்
கூட்டத்துக்கு துணைத்தலைவர் சுப்பையா, ஆணையாளர் பாரிசான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் 28 பேர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-
சங்கர சுப்பிரமணியன் (பா.ஜ.க.):- குடிநீர் பிரச்சினை நகர் முழுவதும் உள்ளது. இந்த நிலையில் சொத்துவரியை உயர்த்தியிருப்பது தென்காசிக்கு வேண்டாம். எனவே நகராட்சியில் இந்த வரி உயர்வை ரத்து செய்ய தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
முகமது மைதீன் (சுேயச்சை):- தென்காசியில் பல இடங்களில் கலப்பட பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதனை நமது நகரசபையில் இருந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதிகாரி:- நமக்கு அந்த அதிகாரம் இல்லை. அதற்கென உணவுப்பொருள் பாதுகாப்பு துறை உள்ளது. அவர்களிடம் கூறுவோம்.
துப்புரவு பணி
காதர்மைதீன் (காங்.):- குப்பைகளை அள்ளி வாறுகால்களின் ஓரமாக வைத்துவிட்டு சென்று விடுகிறார்கள். அதனை அப்புறப்படுத்த வேண்டும் என்று கூறினால் ஊழியர்கள் பற்றாக்குறை என்கிறார்கள்.
அதிகாரி:- நம்மிடம் இருக்கும் பணியாளர்களை வைத்து துப்புரவு பணி நடைபெறுகிறது. புதிதாக பணியாட்கள் எடுக்கும்போது இந்த பிரச்சினை இருக்காது.
சுனிதா (பா.ஜ.க.):- எனது வார்டான 23-வது வார்டில் குடிநீர் வினியோகம் சீராக வழங்க வேண்டும்.
ஆஷிஷ் முபீனா (தி.மு.க.):- அருணாசலபுரம் தெருவில் குடிநீர் குறைவான நேரமே வருகிறது. அதனை சீரமைக்க வேண்டும். மேலும் மரைக்காயர் பள்ளிவாசல் தெரு பகுதியில் குண்டும், குழியுமாக சாலை உள்ளது.
தலைவர்:- குடிநீர் வினியோகம் செய்யும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு இருந்தது. அதனால் நகர் முழுவதும் பல இடங்களில் குடிநீர் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அது சரி செய்யப்பட்டு விட்டது. இனிமேல் சீராக தண்ணீர் கிடைக்கும். சொத்து வரி உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.
வெளிநடப்பு
அந்த நேரத்தில் பா.ஜ.க. கவுன்சிலர்கள் சங்கர சுப்பிரமணியன், லட்சுமண பெருமாள், சுனிதா, பொன்னம்மாள் ஆகியோர் சொத்து வரி உயர்வை ரத்து செய்யக்கோரி தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி வெளிநடப்பு செய்தனர். அவர்களுடன் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் உமாமகேஸ்வரன், ராமசுமதி, குருசாமி ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.
அப்போது கவுன்சிலர் முகமது மைதீன் தனது தலையில் ஒரு கல்லை வைத்துக்கொண்டு கூட்ட அரங்கிற்கு வந்தார். பின்னர் அவர், சொத்துவரி உயர்வை குறைக்க வேண்டும். சொத்து வரியை அதிகரிக்க சொல்லி வற்புறுத்திய பா.ஜனதா கட்சியை கண்டிக்கிறேன், கூட்டம் முடியும் வரை தரையில் அமருகிறேன் என்று கூறி விட்டு அமர்ந்தார். இந்த நேரத்தில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக கூறி தலைவர் கூட்டத்தை முடித்து வைத்தார்.