ஜீயபுரம்:
ஜீயபுரம் பகுதியில் நேற்று மதியம் திடீரென சூறாவளி காற்றுடன் லேசான மழை பெய்தது. அப்போது பெட்டவாய்த்தலை பழங்காவேரி காவிரி ஆற்றங்கரையில் இருந்த நூறு ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த ஆலமரம் வேரோடு சாய்ந்து அருகில் உள்ள பெட்டவாய்த்தலை ஊராட்சிக்கு உட்பட்ட குடிநீர் ஏற்றக்கூடிய மின்மோட்டார் அறையின் மேல் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் இருந்த 4-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்ததால், அப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். மரம் சாய்ந்தபோது அப்பகுதியில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. மேலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இது பற்றி தகவல் அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் விரைந்து வந்து பொதுமக்கள் செல்ல வசதியாக பாதையை சரி செய்தனர்.