முட்டப்பதிக்கு முத்துக்குடை ஊர்வலம்
சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் இருந்து முட்டப்பதிக்கு முத்துக்குடை ஊர்வலம் நடைபெற்றது. இதில் அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தென்தாமரைகுளம்:
சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் இருந்து முட்டப்பதிக்கு முத்துக்குடை ஊர்வலம் நடைபெற்றது. இதில் அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வடக்கு வாசலில் தவம்
சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சாமி தலைமைப் பதியின் வடக்கு வாசலில் 6 வருடங்கள் பக்தர்களுக்காக தவமிருந்தார். இந்த தவம் நிறைவு பெற்றபிறகு அந்த தவத்தின் பலனை பற்றி அறிவதற்காக முட்டப்பதி பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் திருமால், கலைமுனி, ஞானமுனி ஆகிய இருதூதர்களை அனுப்பி சாமிதோப்பில் இருந்து அய்யா வைகுண்டசாமியை முட்டப்பதிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தார். தூதர்கள் மற்றும் தனது பக்தர்களுடன் அய்யா வைகுண்டசாமி பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று சாமிதோப்பில் இருந்து ஊர்வலமாக முட்டப்பதி நோக்கி சென்றார்.
அங்கு திருப்பாற்கடலுக்குள் சென்று திருமாலின் ஆலோசனை பெற்று பின்னர் அன்று மாலையே சாமி தோப்புக்கு திரும்பி வந்ததாக கூறப்படுகிறது. இதை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை சாமிதோப்பு தலைமைப் பதியிலிருந்து முட்டப்பதிக்கு அய்யா வழி பக்தர்கள் கலந்து கொள்ளும் முத்துக் குடை ஊர்வலம் நடைபெறுவது வழக்கம்.
முத்துக்குடை ஊர்வலம்
அதன்படி முத்துக்குடை ஊர்வலம் நேற்று நடைபெற்றது. முத்துக்குடை ஊர்வலத்தை முன்னிட்டு சாமிதோப்பு அய்யா வைகுண்ட சாமி தலைமைப்பதியில் அதிகாலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், தொடர்ந்து அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், காலை 6 மணிக்கு தலைமைப்பதியின் முன்பிருந்து முத்துக்குடைகளும், மேளதாளங்களும் முன்செல்ல முத்துக் குடை ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலத்துக்கு டாக்டர் வைகுந்த் தலைமை தாங்கினார்். பால.லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், ஜனா.யுகேந்த், ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர்வலத்தை பால. ஜனாதிபதி தொடங்கி வைத்தார். ஊர்வலம் சாமிதோப்பில் இருந்து புறப்பட்டு கரும்பாட்டூர், ஈச்சன்விளை, அகஸ்தீஸ்வரம், வழியாக முட்டப்பதி சென்றடைந்தது. ஊர்வலம் போகும் பகுதிகளிலுள்ள நிழல்தாங்கல்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
சிறப்பு பணிவிடை
பிற்பகல் ஊர்வலம் முட்டப்பதியை அடைந்தது. அங்கு அய்யா வைகுண்ட சாமிக்கு சிறப்பு பணிவிடையும், உச்சி படிப்பும் தொடர்ந்து அய்யாவழி பக்தர்களுக்கு அன்னதானமும் நடைபெற்றது. பின்னர் ஊர்வலம் மீண்டும் முட்டப்பதிலிருந்து புறப்பட்டு கொட்டாரம், அச்சங்குளம், பொற்றையடி, அரசம்பதி வழியாக சாமிதோப்பு தலைமைப் பதியை வந்தடைந்தது. ஊர்வலம் வரும் வழிகளில் அய்யா வழி பக்தர்கள் ஊர்வலத்திற்கு வரவேற்பு கொடுத்தனர். இந்த ஊர்வலத்தில் அய்யாவழி பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.