நெல்லை மாவட்டத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை
நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலை இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
நெல்லை:
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. நண்பகல் நேரத்தில் வெப்ப நிலை 100 டிகிரி வரை பதிவாகி தாக்குகிறது. இதனால் பொதுமக்கள் மதிய நேரத்தில் சாலைகளில் நடமாடுவதை தவிர்த்தனர். மதிய நேர இருசக்கர வாகன போக்குவரத்தும் குறைந்தது. மக்கள் குளிர்பான கடைகள், குளிர்சாதன வசதிகளை தேடிச்சென்றனர்.
குடைபிடித்தபடி சென்றனர்.
இந்தநிலையில் இலங்கை மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சில மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி, நேற்று காலை நெல்லை பகுதியில் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. பின்னர் காலை 6 மணியளவில் பரவலாக மழை பெய்தது. காலை நேரத்தில் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு புறப்பட்டு சென்ற மாணவ-மாணவிகள் சிரமப்பட்டனர். பெரும்பாலானோர் குடைபிடித்தபடி சென்றனர். இதன்பின்னர் மதியம் வெயில் அடித்தது.
இந்தநிலையில் மாலை 5-30 மணிக்கு வானம் மீண்டும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 6 மணிக்கு நெல்லை மாநகர பகுதிகளான நெல்லை சந்திப்பு, தச்சநல்லூர், பாளையங்கோட்டை, கொக்கிரகுளம், கே.டி.சி.நகர், மகாராஜா நகர், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை ¾ மணி நேரம் கொட்டி தீர்த்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடந்தது. பாளையங்கோட்டை அண்ணா ஸ்டேடியம் அருகே அதிகளவில் தண்ணீர் தேங்கியது. பிற இடங்களிலும் ரோடுகளில் மழைதண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதேபோல் பேட்டை, சுத்தமல்லி, கொண்டாநகரம், சேரன்மாதேவி, மணிமுத்தாறு, கோபாலசமுத்திரம், முக்கூடல் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று மாலையில் பலத்த மழை பெய்தது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
களக்காடு -3, பாளையங்கோட்டை -5, நெல்லை -1.
இதேபோல் தென்காசி மாவட்டத்தில் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்தது.