முன்னாள் நில அளவையருக்கு ஒரு ஆண்டு ஜெயில்

பத்மநாபபுரம் நகராட்சி முன்னாள் நில அளவையர் லஞ்சம் வாங்கிய வழக்கில் ஒரு ஆண்டு ஜெயில் தண்டணை விதித்து தீர்ப்பு வழங்கியது.

Update: 2022-04-08 21:55 GMT
நாகர்கோவில்:
தக்கலையை சேர்ந்தவர் ஹரிகுமார் (வயது 60). இவர் தனக்கு சொந்தமான நிலத்தை அளந்து உட்பிரிவு (சப்-டிவிஷன்) செய்துதரக்கோரி கடந்த 2007-ம் ஆண்டு விண்ணப்பித்திருந்தார். இதுதொடர்பாக அவர் அப்போது பத்மநாபபுரம் நகராட்சி தலைமை நில அளவையராக இருந்த தாணுமூர்த்தியை சந்தித்து பேசினார். உடனடியாக நிலத்தைஅளந்து உட்பிரிவு செய்துதர வேண்டும் என்றால் தனக்கு ரூ.1000 லஞ்சம் தரவேண்டும் என்று தாணுமூர்த்தி கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத ஹரிகுமார், இதுகுறித்து நாகர்கோவிலில் உள்ள மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் செய்தார். அதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரையின்பேரில் அவர் ரூ.1000-ஐ லஞ்சமாக தாணுமூர்த்திக்கு கொடுத்தார். அதை அவர் வாங்கும்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தாணுமூர்த்தியை கைது செய்து, நாகர்கோவிலில் உள்ள தலைமை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை தலைமை குற்றவியல் நீதிபதி மாயகிருஷ்ணன் விசாரித்து வந்தார். நேற்று அவர் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் பதிவு செய்திருந்த (ஊழல் தடுப்புச் சட்டம்-7, ஊழல் தடுப்புச் சட்டம்- 13 (1), (D) ) ஆகிய 2 பிரிவுகளின் கீழ் தாணுமூர்த்திக்கு  தலா ஒரு ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1000 வீதம் மொத்தம் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து, சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். தண்டனை பெற்ற தாணுமூர்த்தி நெல்லை மாவட்டம் பணகுடி பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

மேலும் செய்திகள்