தொழிலாளி வெட்டிக்கொலை

மேட்டூர் அருகே முன்விரோதம் காரணமாக வெல்டிங் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். குழந்தை கண்முன்னே வெறிச்செயலில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-08 21:44 GMT
மேட்டூர்:-
மேட்டூர் அருகே முன்விரோதம் காரணமாக வெல்டிங் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். குழந்தை கண்முன்னே வெறிச்செயலில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
வெல்டிங் ெதாழிலாளி
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கருமலைக்கூடல் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 26). இவர் வெல்டிங் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி சுகந்தி என்ற மனைவியும், 1½ வயதில் ரித்திஷ் என்ற குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் கருமலைக்கூடல் கோவில் திருவிழாவையொட்டி நடந்த கலைநிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு ராஜேஷ் தனது மோட்டார் சைக்கிளில், உறவினரின் 4 வயது குழந்தையை அழைத்து கொண்டு கோவிலுக்கு சென்றார். பின்னர் கலை நிகழ்ச்சிகளை பார்த்து விட்டு நள்ளிரவு வீடு திரும்பினார்.
வெட்டிக்கொலை
வீட்டின் அருகே சென்ற போது மோட்டார் சைக்கிள்களில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் ராஜேசை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் திடீரென்று குழந்தையின் கண்முன்னே அரிவாளால் ராஜேசின் கழுத்துப்பகுதியில் சரமாரியாக வெட்டினார்கள். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். இதைக் கண்ட அவரது உறவினரின் குழந்தை சாலையில் அழுதபடி ஓடியது. குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்த போது மர்ம நபர்கள் தப்பி ஓடினார்கள். 
மேலும்  ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய ராஜேசை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
முன்விரோதம்
போலீசார் நடத்திய விசாரணையில் ராஜேசுக்கும், அதே பகுதியை சேர்ந்த லல்லு பிரசாத் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் லல்லு பிரசாத் மற்றும் அவரது கூட்டாளிகள் இந்த கொலையை செய்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் கருமலைக்கூடல் பகுதியை சேர்ந்த லல்லு பிரசாத் (29), விஜய் என்கிற வெள்ளையன் (28), சிபி (24), அபிமன்யு (21), மதியழகன் (22) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இறந்து போன ராஜேஷ் மீது கொலை வழக்கு மற்றும் அடிதடி வழக்கு உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்