கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
ஆளூா் அருேக கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள் அதிகாரிகளை சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது
திங்கள்சந்தை:
நாகர்கோவில் அருகே ஆளுர் வீரநாராயணசேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் அம்பிகா என்பவர் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக உள்ள கருப்புகோடு 5 என்ற குழுவின் பெயரில் போலி ஆவணங்கள் தயார் செய்து மோசடியில் ஈடுபட்டதாவும், புதிய உறுப்பினர் சேர்க்கையில் பாகுபாடு காட்டுவதாகவும், நகைக்கடன், உரம் வழங்குவதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை கண்டித்து நேற்று காலையில் பா.ஜனதாவினர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் திரண்டு கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு குருந்தன்கோடு ஒன்றிய பா.ஜனதா தலைவர் கண்ணன் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதம், குருந்தன்கோடு ஒன்றிய தலைவர் அனுஷ்யாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதுபற்றி தகவல் அறிந்து வந்த தக்கலை கூட்டுறவு துணை பதிவாளர் பாலசுப்பிரமணியன், இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால் அதிகாரிகளை சிறை பிடித்து திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர், தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் சம்பந்தப்பட்ட நபர் மீது 30 நாட்களில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர். அதைதொடர்ந்து இரவு 7 மணியளவில் போராட்டத்தை கைவிட்டுபொதுமக்கள் கலைந்து சென்றனர்.