விபத்தில் காயமடைந்த வக்கீல் சாவு
அம்பை அருகே விபத்தில் காயமடைந்த வக்கீல் பரிதாபமாக இறந்தார்.;
அம்பை:
அம்பை அருகே உள்ள அடையகருங்குளம் நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சிவசாமிநாதன் (வயது 53). வக்கீல். இவர் ஏற்கனவே அடையகருங்குளம் பஞ்சாயத்து தலைவராகவும், அம்பை யூனியன் கவுன்சிலராகவும் இருந்து உள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அம்பையில் இருந்து அடையகருங்குளம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அம்பை- பாபநாசம் ரோட்டில் உள்ள தனியார் பெட்ரோல் பங்க் அருகில் சென்றபோது எதிரே வந்த காரும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன.
இதில் சிவசாமிநாதன் படுகாயம் அடைந்தார். இதையடுத்து அவர் அம்பை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சிவசாமிநாதன் நேற்று மதியம் இறந்தார். இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.