பெங்களூருவில் 14 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பெங்களூருவில் உள்ள 14 தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதுபற்றி தீவிர விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-04-08 21:13 GMT
பெங்களூரு:

பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

  பெங்களூரு மகாதேவபுராவில் கோபாலன் இன்டர்நேஷனல் தனியார் பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயில் வந்திருந்தது. அதில், ‘பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு உள்ளது. அது சக்தி வாய்ந்தது. நீங்கள் சுதாரித்துக் கொண்டால் 100-க்கும் மேற்பட்டோர் தப்பித்து கொள்ளலாம். இந்த வெடிகுண்டு விவகாரத்தை நகைச்சுவையாக எடுத்து கொள்ள வேண்டாம். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவியுங்கள். எல்லாமே உங்களது கையில் தான் இருக்கிறது’ என்று கூறப்பட்டு இருந்தது.

  இ-மெயிலுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை பார்த்து பள்ளி ஊழியர் அதிா்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர் உடனடியாக நிர்வாகத்திற்கும், பிற ஆசிரியர்களுக்கும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, பள்ளியில் இருந்து மாணவ-மாணவிகள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். அதுபோல், ஆசிரியர்கள், பிற ஊழியர்களும் வெடிகுண்டு பீதியில் வெளியே ஓடிவந்தனர்.

வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை

  இதுபற்றி தகவல் அறிந்ததும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் மற்றும் போலீசார் அந்த பள்ளிக்கு விரைந்து சென்றார்கள். பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளியின் ஒவ்வொரு பகுதியையும் விடாமல் பரிசீலனை நடத்தினார்கள். இதுபற்றிய தகவல் பரவியதும் மாணவ-மாணவிகளின் பெற்றோரும் பதறி அடித்து கொண்டு ஓடிவந்தனர்.

  பின்னர் பள்ளி வளாகத்தில் நின்ற தங்களது பிள்ளைகளை வீட்டுக்கு அழைத்து சென்றார்கள். இதற்கிடையில், மகாதேவபுராவில் உள்ள கோபாலன் இன்டர்நேஷனல் பள்ளியை போன்று, வர்த்தூரில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளி, ஹெண்ணுரில் இருக்கும் சென்ட் வின்சென்ட் மவுல் பள்ளி, மாரத்தஹள்ளி பகுதியில் உள்ள நியூ அகாடமி பள்ளி, கோவிந்தபுராவில் செயல்பட்டு வரும் இந்தியன் பப்ளிக் பள்ளி ஆகியவற்றுக்கும் இ-மெயில் மூலமாக மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தனர்.

வெடிகுண்டு சிக்கவில்லை

  இதுதவிர பெங்களூரு புறநகர் மாவட்டத்தில் உள்ள ஹெப்பகோடி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட உஷ்கூரில் இருக்கும் எபினேசர் இன்டர் நேஷனல் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ-மெயில் வந்தது. இதுபோல், மேலும் 8 பள்ளிகளுக்கும் இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்திருந்தது. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் வந்த 14 பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், பிற ஊழியர்களை வெளியே அனுப்பி வைத்து விட்டு வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் சோதனை நடத்தினார்கள்.

  14 பள்ளிகளிலும் ஒரு இடம் கூட விட்டு வைக்காமல் வெடிகுண்டு நிபுணர்களும், போலீசாரும் சோதனை நடத்தினார்கள். பல மணிநேரம் நடந்த சோதனையின் போது பள்ளிகளில் இருந்து எந்த விதமான வெடிகுண்டும் சிக்கவில்லை. இதனால் பள்ளிகளுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் வெறும் புரளி என்றும், மர்மநபர்கள் யாரோ இ-மெயில் அனுப்பி வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.

சட்டப்படி கடும் நடவடிக்கை

  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட 14 பள்ளிகளும் தனியாருக்கு சொந்தமானதாகும். அந்த பள்ளிகளின் இ-மெயில் முகவரிக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இ-மெயில் அனுப்பி வைத்திருந்தார்கள். இதன் மூலம் 14 பள்ளிகளுக்கும் ஒரே கும்பலே மிரட்டல் விடுத்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். மா்மநபர்களை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி உள்ளனர்.

  இதுகுறித்து போலீஸ் கமிஷனர் கமல்பந்த் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘பெங்களூரு மாநகர் மற்றும் புறநகரில் ஒரே நேரத்தில் 14 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இது வெறும் புரளி ஆகும். மர்மநபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

வழக்குப்பதிவு

  இந்த சம்பவங்கள் தொடர்பாக பெங்களூரு போலீசார் மற்றும் ஹெப்பகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

  இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

  பெங்களூருவில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்து கொண்டு விசாரிக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்யும்படியும் கூறியுள்ளேன்.

அறிக்கை தாக்கல்

  பெற்றோர் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வெடிகுண்டு மிரட்டல் எங்கிருந்து வந்துள்ளது என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
  இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

  இந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை கிருஷ்ணா இல்லத்தில் நேற்று உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி. தயானந்த் நேரில் சந்தித்து அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

மேலும் செய்திகள்