போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது ரெயிலில் அடிபட்டு பிரபல ரவுடி சாவு

ராமநகர் அருகே போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்ற பிரபல ரவுடி ரெயிலில் அடிபட்டு பலியான பரிதாபம் நடந்துள்ளது.

Update: 2022-04-08 21:05 GMT
ராமநகர்:

ரவுடி தப்பி செல்ல முயற்சி

  பெங்களூரு சுங்கதகட்டேயை சேர்ந்தவர் திலீப்(வயது 28). இவர், பிரபல ரவுடி ஆவார். பெங்களூரு புறநகர் மாவட்டம் மாதநாயக்கனஹள்ளி போலீஸ் நிலையத்தில் திலீப்பின் பெயர் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. நேற்று முன்தினம் ராமநகர் மாவட்டம் பசவனபுரா கேட் பகுதியில் ராமநகர் புறநகர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தார்கள். அதாவது பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள்.

  அந்த சந்தர்ப்பத்தில் மைசூருவில் இருந்து பெங்களூருவை நோக்கி ரவுடி திலீப் தனது கூட்டாளிகள் 3 பேருடன் காரில் வந்தார். பசவனபுரா கேட் பகுதியில் போலீசார் நிற்பதை பார்த்ததும் திலீப், அவரது கூட்டாளிகள் காரை திருப்பி கொண்டு வேகமாக சென்றார்கள். இதைப்பார்த்த போலீசார், காரை பின்தொடர்ந்து விரட்டி சென்றார்கள்.

ரெயிலில் அடிபட்டு சாவு

  பசவனபுரா கிராமத்திற்குள் திலீப், அவரது கூட்டாளிகள் காரில் வேகமாக சென்றார்கள். அப்போது அங்கு ரெயில் வந்ததால் கேட் மூடப்பட்டு இருந்தது. இதனால் கூட்டாளிகளை காரில் இருக்கும்படி கூறிவிட்டு ரெயில்வே தண்டவாளத்தை கடந்து தப்பி செல்ல திலீப் முயன்றார். அந்த சந்தர்ப்பத்தில் அவ்வழியாக வந்த ஒரு ரெயில் திலீப் மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்தகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் பலியானாா்.

  தகவல் அறிந்ததும் ராமநகர் ரெயில்வே போலீசார் மற்றும் புறநகர் போலீசார் விரைந்து வந்து திலீப்பின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். மேலும் திலீப்பின் கூட்டாளிகள் 3 பேரையும் போலீசார் கைது செய்தார்கள். போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக ரெயிலில் அடிபட்டு திலீப் பலியாகி இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராமநகர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்