ஆற்றில் குதித்து வன ஊழியர் தற்கொலை
ஆற்றில் குதித்து வன ஊழியர் தற்கொலை செய்துகொண்டார்.
பெங்களூரு:
விஜயாப்புரா மாவட்டம் கொல்லார் தாலுகா கோலசங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் ஈரப்பா துண்டப்பா தட்டி(வயது 30). இவர் கொல்லார் மண்டல வனத்துறையில் வனப்பாதுகாவலராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் கொல்லார் டவுன் பகுதியில் உள்ள கிருஷ்ணா ஆற்றுப்பாலத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். மோட்டார் சைக்கிளை அங்கு நிறுத்திய அவர் திடீரென ஆற்றுப்பாலத்தின் மேலே இருந்து கிருஷ்ணா ஆற்றில் குதித்தார்.
அவர் தனது சீருடையுடன் ஆற்றில் குதித்ததால் எதையோ கண்டுபிடிக்க முயல்கிறார் என்று அங்கிருந்தவர்கள் நினைத்தனர். பின்னர் சுதாரித்துக் கொண்ட அவர்கள் ஆற்றில் குதித்து ஈரப்பாவை மீட்க முயன்றனர். ஆனால் அதற்குள் அவர் தண்ணீரில் மூழ்கி பலியானார். அவர் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை. இதுபற்றி கொல்லார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.