விவசாயிகள் அமைப்பினர் உண்ணாவிரதம்
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகஅரசை கண்டித்து தஞ்சையில் விவசாயிகள் அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
தஞ்சாவூர்;
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகஅரசை கண்டித்து தஞ்சையில் விவசாயிகள் அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உண்ணாவிரதம்
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ரூ.1000 கோடி நிதி ஒதுக்கிய கர்நாடகஅரசை கண்டித்து தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு காவிரித்தாய் இயற்கை வழி வேளாண் உழவர் நடுவம் ஒருங்கிணைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது.
இதற்கு நிறுவன தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் சின்னத்துரை வரவேற்றார். போராட்டத்தை தாளாண்மை உழவர் இயக்க தலைவர் திருநாவுக்கரசு தொடங்கி வைத்து பேசினார்.
இதில் தமிழ் தேச தன்னுரிமை கட்சித் தலைவர் வியனரசு, தமிழரசு பேரவை அமைப்பு செயலாளர் பனசை அரங்கன், விவசாய மாணவரணி தொழிலாளர் சங்க நிர்வாகி பக்கிரிசாமி, மூவேந்தர் அனைத்து கட்டிட தொழிலாளர் சங்க நிறுவன தலைவர் கனகராசு மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பாக்கியராஜ், மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
கோரிக்கைகள்
போராட்டத்தில், காவிரியின் குறுக்கே எந்த காரணத்தை கொண்டும் கர்நாடகஅரசு அணை கட்ட மத்தியஅரசு அனுமதி அளிக்கக்கூடாது. தமிழகத்துக்கு வரக்கூடிய காவிரி நீர் தங்கு தடையின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆறுகளில் சிமெண்டு தரைதளம் போடுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
விவசாய தொழிலாளர்கள் குழந்தைகளின் கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும். மழைகாலத்தில் கால்நடைகளுக்கு தட்டுப்பாடு இன்றி வைக்கோல் போன்ற தீவனங்கள் கிடைக்கும் வகையில் வெளிமாநிலங்களுக்கு வைக்கோல் ஏற்றி செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
நம்மாழ்வார் படத்திற்கு மாலை
ஆர்ப்பாட்டத்தை கோவை சித்த மருத்துவ ஆராய்ச்சியாளர் கோபாலகிருஷ்ணன் முடித்து வைத்து பேசினார். முடிவில் அருண் சுபாஷ் நன்றி கூறினார். முன்னதாக இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார், காவிரித்தாய் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.