தலை துண்டித்து வியாபாரி கொலை; நண்பர் கைது
தலை துண்டித்து வியாபாரியை கொலை செய்த நண்பர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு:
சித்ரதுர்கா மாவட்டம் கிரியூர் அருகே ரவனகெரே கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர், பெங்களூருவில் தள்ளுவண்டியில் உணவு விற்பனை செய்து வந்தார். இவருடன் சேர்ந்து அதே கிராமத்தை சேர்ந்த நண்பரான சீனிவாஸ் என்பவரும் வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெங்களூருவில் இருந்து ரமேசும், சீனிவாசும் ரவனகெரே கிராமத்திற்கு வந்திருந்தனர். நேற்று முன்தினம் ரமேஷ் வீட்டுக்கு சீனிவாஸ் வந்திருந்தார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் உண்டானது. இந்த நிலையில், ரமேசின்தலையை துண்டித்து சீனிவாஸ் கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் தலையை அருகில் உள்ள காலி நிலத்தில் சீனிவாஸ் புதைத்துவைத்தார்.
நேற்று அதிகாலையில் தனது மகன் தலை இல்லாமல் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு ரமேசின் தந்தை மல்லண்ணா அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்ததும் கிரியூர் போலீசார் விரைந்து வந்து ரமேஷ் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது சீனிவாசின் 2 மனைவிகளும் பிரிந்துசென்றிருந்தனர். அவருக்கு பணக்கஷ்டமும் ஏற்பட்டு இருந்தது. ரமேஷ் தான் மாந்தீரிகம் செய்து தனதுமனைவிகளை பிரித்து விட்டதாக சீனிவாஸ் கருதினார். இதையடுத்து, ரமேசின் தலையை துண்டித்து சீனிவாஸ் கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து கிரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசை கைது செய்துள்ளனர்.