சொத்து வரி உயர்வை கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்

நெல்லையில் சொத்து வரி உயர்வை கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-04-08 20:25 GMT
நெல்லை:
தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தி இருப்பதை திரும்பப்பெற வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சொத்து வரி உயர்ைவ கண்டித்து நெல்லை மாவட்ட பா.ஜனதா சார்பில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்ட பொறுப்பாளர் கட்டளை ஜோதி தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட பார்வையாளர் பாலாஜி, தச்சநல்லூர் மண்டல முன்னாள் தலைவர் முருகப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தேசிய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான சசிகலா புஷ்பா கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரியை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்தும், சொத்து வரி உயர்வை திரும்பப்பெற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் மகாராஜன், தயாசங்கர், முன்னாள் பொதுச்செயலாளர் முத்துக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் சசிகலா புஷ்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படும் வகையில் 150 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது மாநில தி.மு.க. அரசு பொய் குற்றச்சாட்டு சொல்லி வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சி தலைவராக இருந்தபோது சொத்துவரி உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்த பின்னர் தி.மு.க. மக்கள் வயிற்றில் அடிக்கும் வேலையை செய்கிறது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியும் எந்த பலனும் இல்லை. தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியான பெண்களுக்கான ரூ.1,000 வழங்கப்படவில்லை. மாணவ -மாணவிகளின் கல்விக்கடனை தள்ளுபடி செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்