சேலம் ரெயில்வே கோட்டத்தில் சரக்கு போக்குவரத்து மூலம் ரூ.274.35 கோடி வருவாய்
சேலம் ரெயில் கோட்ட சரக்கு போக்குவரத்து மூலம் கடந்த நிதியாண்டில் ரூ.274.35 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
சூரமங்கலம்:-
சேலம் ரெயில் கோட்ட சரக்கு போக்குவரத்து மூலம் கடந்த நிதியாண்டில் ரூ.274.35 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
சரக்கு ரெயில்கள்
சேலம் ெரயில்வே கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களில் இருந்து பெட்ரோலிய பொருட்கள், இரும்பு, எக்கு பொருட்கள், சிமெண்டு, உணவு பொருட்கள் உள்ளிட்டவை பல்வேறு மாநிலங்களுக்கும், மாவட்டங்களுக்கும் சரக்கு ரெயில்கள் மூலமாக அனுப்பி வைக்கப்படுகின்றன. இதன் மூலம் பெறப்படும் வருவாய் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
அதன்படி கடந்த நிதியாண்டில் (2021-22) ஏப்ரல் முதல் மார்ச் வரை உள்ள காலத்தில் 32 லட்சத்து 69 ஆயிரத்து 459 டன் சரக்கு அனுப்பி வைத்ததன் மூலம் ரூ.274.35 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதுவே முந்தைய நிதியாண்டில் (2020-21) 28 லட்சத்து 29 ஆயிரத்து 576 டன் சரக்கு கையாளப்பட்டு இருக்கிறது, அப்போது ரூ.230.57 கோடி வருவாய் கிடைத்தது,
இரும்பு பொருட்கள்
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் சரக்கு போக்குவரத்தில் வருவாய் 18.99 சதவீதம் அதிகரித்துள்ளது. சரக்கின் அளவை பொறுத்த அளவில் 15.55 சதவீதம் அதிகமாகும். இதில் சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட இருகூரில் இருந்து பெட்ரோலிய பொருட்கள் சரக்கு ெரயில்களில் ஏற்றப்பட்டு மைசூரு, பெங்களுரு, ராய்ச்சூர் உள்ளிட்ட ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது, கரூர் பாளையம் மற்றும் வீரராக்கியம் ஆகிய ெரயில் நிலையங்களில் இருந்து சிமெண்டு மூட்டைகள் ஏற்றப்பட்டு தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும், கேரளா, கர்நாடகா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது,
இரும்பு பொருட்களை பொறுத்தமட்டில் மேச்சேரியில் இருந்து காக்கிநாடா, சென்னை துறைமுகம், அகமதாபாத் துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகிறது, இதுபோல் பார்சல் ெரயில்களில் 3 லட்சத்து 81 ஆயிரத்து 648 குவிண்டால் அளவிற்கு உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ரூ.22,03 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
அதிகரிக்க நடவடிக்கை
சேலம் ரெயில்வே கோட்டம் தொடங்கப்பட்ட 2008-2009 நிதியாண்டில் இருந்து மிக அதிகபட்சமாக கடந்த நிதியாண்டில் (2021-2022) அதிகளவில் சரக்கு கையாண்டு சாதனை படைத்துள்ளது. நடப்பு நிதியாண்டு தொடங்கியுள்ள நிலையில் இதன் சரக்கு வருவாயை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக சேலம் ெரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்,