744 நிறுவனங்களுக்கு ரூ.2¾ கோடி அபராதம் விதிப்பு

சேலம் மாவட்டத்தில் இதுவரை உணவு பொருட்களில் கலப்படம் செய்தது உறுதி செய்யப்பட்ட 744 நிறுவனங்களுக்கு ரூ.2¾ கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தெரிவித்தார்.

Update: 2022-04-08 20:11 GMT
சேலம்:-
சேலம் மாவட்டத்தில் இதுவரை உணவு பொருட்களில் கலப்படம் செய்தது உறுதி செய்யப்பட்ட 744 நிறுவனங்களுக்கு ரூ.2¾ கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தெரிவித்தார்.
அதிகாரிகள் ஆய்வு
சேலம் மாவட்டத்தில் உணவு பொருட்களில் கலப்படம் செய்வதை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக ஓட்டல்கள், சேகோ ஆலைகள், டீக்கடைகள், குழல் அப்பளம் மற்றும் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அடிக்கடி ஆய்வு செய்து வருகின்றனர்.
அப்போது பொருட்களில் கலப்படம் செய்வதற்காக வைக்கப்பட்ட ரசாயன பொருட்கள் உள்ளிட்டவைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்கின்றனர். மேலும் அங்குள்ள பொருட்களின் மாதிரிகளை சேகரித்து சென்னை கிண்டியில் உள்ள உணவு பகுப்பாய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதில் எந்த பொருட்களில் கலப்படம் செய்தியிருப்பது உறுதி செய்யப்பட்டால் அடுத்தக்கட்டமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டு வருகிறது.
அபராதம் விதிப்பு
இதுகுறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் பொருட்களில் தரம் குறைவு,  மக்களை திசை திருப்பும் வகையில் விளம்பரம் செய்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது சிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த வழக்குகள் மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் தீர்வு காணப்படும். உரிமம் இல்லாமல் தொழில் செய்தல், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் பொருட்களில் கலப்படம் செய்தல் உள்ளிட்ட குற்றம் புரிவோர் மீது கோர்ட்டில் குற்ற வழக்கு தொடரப்படும். இந்த வழக்குகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 641 சிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் மாவட்ட நிர்வாக அலுவலர்கள் மூலம் 568 நிறுவனங்கள் மீதான வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.2 கோடியே 35 லட்சத்து 48 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 441 குற்ற வழக்குகள் கோர்ட்டில் தொடரப்பட்டுள்ளது. இதில் 176 நிறுவனங்களின் வழக்குகளுக்கு தீர்ப்பு கூறப்பட்டு அபராதமாக ரூ.42 லட்சத்து 83 ஆயிரத்து 500 விதிக்கப்பட்டுள்ளது. மற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்