காளை உரிமையாளர்கள்-மாடுபிடி வீரர்கள் தள்ளுமுள்ளு

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அனுமதி சீட்டு வாங்க காளை உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் முன்பதிவு மையத்தில் அலைமோதியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Update: 2022-04-08 20:04 GMT
திருமங்கலம்,

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க அனுமதி சீட்டு வாங்க காளை உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் முன்பதிவு மையத்தில் அலைமோதியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

நாளை ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல் கிராமத்தில் சுந்தரராஜ பெருமாள் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதில் பங்கேற்க 600 காளைகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்கான அனுமதி சீட்டு பெற காளைகளின் உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் அங்குள்ள முன்பதிவு மையத்தில் நேற்று காலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 
"
போலீஸ் தடியடி

நேரம் செல்ல, செல்ல அனுமதி சீட்டு வாங்க கூட்டம் அலைமோதியது. அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாரும் கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றனர். ஒரு கட்டத்தில் காளை உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் போட்டி போட்டுக்கொண்டு முன்பதிவு மையத்திற்குள் செல்ல முயன்றதால் அங்கு தள்ளு-முள்ளு ஏற்பட்டது.
உடனே அங்கு நின்றிருந்த போலீசார் கூட்டத்தினரை லேசாக தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த கூட்டத்தினர், அனுமதி சீட்டுக்கு அதிகம் பணம் வசூலிப்பதாகவும், முறைப்படி யாருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் கூறினார்கள். தொடர்ந்து கூட்ட நெரிசலை சமாளிக்கும் பொருட்டு போலீசார் டோக்கன் கொடுப்பதை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்