சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.;

Update: 2022-04-08 19:44 GMT
மதுரை, 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், இவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் கடந்த 2020-ம் ஆண்டு போலீசாரால் தாக்கப்பட்டு பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் மற்றும் போலீசார் என 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த இரட்டைக்கொலை சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தியது.
இந்த வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ், தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது சி.பி.ஐ. வக்கீல் ஆஜராகி, பொதுமக்களை பாதுகாப்பதற்குத்தான் போலீசாருக்கு பல்வேறு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த வழக்கை பொறுத்தவரை தந்தை-மகன், போலீஸ் நிலையத்தில் வைத்து கொடூரமாக தாக்கப்பட்டுள்ளனர். தந்தை-மகன் கொலை வழக்கில் மனுதாரர் முக்கிய பங்கு வகித்துள்ளார். எனவே அவருக்கு ஜாமீன் அளிக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வாதாடினார்.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்