தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால்
பெரம்பலூர் மாவட்டம், இரூர் உயர்நிலைப்பள்ளி பின்புறம் கழிவுநீர் வாய்க்கால் செல்கிறது. இந்த கால்வாய் தூர் வாரப்படாமல் உள்ளதால் கழிவுநீர் செல்ல வழியின்றி ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் தேங்கி நிற்கும் கழிவு நீரில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதியில் டெங்கு, மலேரியா காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, இந்த கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், இரூர், பெரம்பலூர்.
குண்டும், குழியுமான சாலைகள்
புதுக்கோட்டை மாவட்டம், பெருங்களூர் அண்டக்குளம்- பெரிய தம்பி உடையான் பட்டி சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தார்சாலை தற்போது மண் சாலையாக மாறி ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தற்போது பெய்த மழை சாலையில் உள்ள பள்ளத்தில் தேங்கி நிற்பதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மண் சாலையை தார் சாலையாக மாற்ற வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், அண்டக்குளம், புதுக்கோட்டை.
புதுக்கோட்டை நகரின் முக்கிய வீதியான வடக்கு ராஜவீதி மகளிர் மேல்நிலைப்பள்ளி தொடங்கி பழனியப்பா முக்கம் மற்றும் பிருந்தாவனம் வரை சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
அப்துல் ரஹ்மான், அடப்பன்வயல், புதுக்கோட்டை
கொசுக்கள் தொல்லை
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டம், கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு பேட்டை கிராமத்தில் கொசு தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் தூங்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இதனால் தொற்று நோய் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் மாலை நேரத்தில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், மேற்பனைக்காடு பேட்டை, புதுக்கோட்டை.
குகைவழி பாதை அமைக்கப்படுமா?
கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மூலிமங்கலம் பிரிவு சாலையில் வாகன ஓட்டிகள் திரும்பும்போது தொடர்ந்து அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்பட்டு வருகிறது. எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மூலிமங்கலம் பிரிவு சாலையில் குகைவழி பாதை அமைத்து விபத்தினை தடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், மூலிமங்கலம், கரூர்.