பிடாரி அம்மன் கோவில் தேரோட்டம்
தோகைமலை அருகே பிடாரி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பிடாரி அம்மனை தரிசனம் செய்தனர்.
தோகைமலை,
பிடாரி அம்மன் கோவில்
தோகைமலை அருகே ஆர்.டி.மலையில் பிரசித்தி பெற்ற பிடாரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழா கடந்த 31-ந் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் 8 நாட்கள் விரதம் இருந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகளை செய்து வழிபட்டு வந்தனர்.
இதையடுத்து, கடந்த 5-ந் தேதி பிடாரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தாரை தப்பட்டை முழங்க வாணவேடிக்கையுடன் சப்பரத்தில் 3 முறை முக்கிய வீதிகளில் உலா வந்தார்.
குதிரை வாகனத்தில் பவனி
6-ந் தேதி குதிரை வாகனத்தில் பிடாரி அம்மன் பவனி வந்தார். அப்போது ஆட்டு தலையை பக்தர்கள் மேலே தூக்கி வீசி எறிவார்கள். அதனை சிலர் ஈட்டி மூலம் குத்துவார்கள். இந்த நிகழ்ச்சி தரம் போடும் நிகழ்ச்சி என்று அழைக்கப்படும். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து 7-ந் தேதி பிடாரி அம்மனுக்கு கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்தனர். அதன்பிறகு மாவிளக்கு வைத்து வழிபட்டனர். பக்தர்கள் மொட்டை அடித்து பிடாரி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதனைத்தொடர்ந்து கிடா வெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
தேரோட்டம்
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 7-ந் தேதி இரவு நடைபெற்றது. அப்போது அலங்கரிக்கப்பட்ட தேரில் பிடாரி அம்மன் எழுந்தருளினார். அதன்பின்னர் முக்கிய பிரமுகர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது தாரை தப்பட்டை முழங்கவும், வாண வேடிக்கையுடன் தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பிடாரி அம்மனை தரிசனம் செய்தனர்.
நேற்று மதியம் 3 மணியளவில் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இதில், திரளான பெண்கள் கலந்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். அதன்பிறகு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. மாலை 5 மணியளவில் கோவில் கிணற்றில் கரகம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிடாரி அம்மனை தரிசனம் செய்தனர்.