அரசு பஸ் மோதி பயணிகள் உள்பட 5 பேர் காயம்
அரசு பஸ் மோதி பயணிகள் உள்பட 5 பேர் காயம் அடைந்தனர்.
பெரம்பலூர்
திருச்சி மாவட்டம், துறையூரில் இருந்து பெரம்பலூர் வழியாக நெய்வேலிக்கு அரசு பஸ் ஒன்று பயணிகளுடன் நேற்று காலை புறப்பட்டது. அந்த பஸ் பெரம்பலூர் மாவட்டம், ஈச்சம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே பஸ் வந்த போது, திடீரென்று மொபட்டில் வந்த ஒருவர், பஸ் வருவதை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்றார். இதனை கண்ட டிரைவர் அவர் மீது மோதாமல் இருப்பதற்காக பஸ்சை இடது புறமாக திருப்பி, வலது புறமாக திருப்பிய போது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பக்கம் மோதி விட்டு சிறிது தூரம் சென்று நின்றது. பஸ் மோதிய வேகத்தில் லாரி புதிதாக கட்டப்பட்டு வரும் பயணிகள் நிழற்குடையின் மீது மோதி சேதமடைந்தது. இந்த விபத்தில் பஸ் டிரைவர் திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, செல்லியம்பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 46), மொபட்டில் வந்த ஈச்சம்பட்டி இந்திரா காந்தி தெருவை சேர்ந்த கருப்பையா (56), பஸ்சில் பயணம் செய்த சேலம் மாவட்டம், தம்மம்பட்டியை சேர்ந்த முத்து மனைவி செல்வி (39), பெரம்பலூர் காந்தி நகரை சேர்ந்த முருகேசபூபதி மனைவி சரஸ்வதி (55), சிறுவயலூர் மெயின் ரோட்டை சேர்ந்த நாகராஜ் மகள் மைதிலி (26) ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.