காசோலை மோசடி வழக்கில் நிதி நிறுவன அதிபர் கைது
கரூரில் காசோலை மோசடி வழக்கில் நிதி நிறுவன அதிபர் கைது செய்யப்பட்டார்.
கரூர்,
நிதி நிறுவன அதிபர்
கரூர் மாவட்டம், நங்கவரம் கிராமம், அனஞ்சனூர், குடித்தெருவை சேர்ந்தவர் மணிவேல். இவர் ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். அதே ஊரை சேர்ந்த அவரது உறவினர் சரவணன் (வயது 52). இவர் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இதில் கடந்த 20 ஆண்டுகளாக மணிவேல் தனது மனைவி மற்றும் மகள் பெயரில் டெபாசிட் தொகை செலுத்தி வந்த நிலையில் அதனுடைய முதிர்வு காலம் முடிவடைந்தது.
இதையடுத்து, சரவணன் ரூ.12 லட்சத்து 99 ஆயிரத்து 500 தருவதற்காக 4 காசோலைகளை கொடுத்துள்ளார். அதில் ஒரு காசோலை தொகை ரூ.2 லட்சம் மட்டும் பணவு வரவு வந்ததாகவும், மீதமுள்ள 3 காசோலைகளும் வங்கியில் போதிய பணம் இருப்பு இல்லாமல் திரும்பி வந்துள்ளது.
கைது
இதனைத்தொடர்ந்து மணிவேல் மகன் பாலசுப்பிரமணியன் பலமுறை சரவணனிடம் பணத்தை கேட்டும் அவர் சரியான பதில் கொடுக்காமல் ஏமாற்றும் நோக்கில் செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, பணமோசடி தொடர்பாக கரூர் மாவட்ட குற்றப்பிரிவில் பாலசுப்பிரமணியன் நேற்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.