நாமக்கல்லில் மினி லாரி தீயில் எரிந்து சேதம்
நாமக்கல்லில் மினி லாரி தீயில் எரிந்து சேதமடைந்தது.
நாமக்கல்:
கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வடிவேல். சொந்தமாக மினி லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு வடிவேல் தனது மினி லாரியை கரூரில் இருந்து நாமக்கல்லுக்கு ஓட்டி வந்தார். நாமக்கல்லில் உள்ள மோகனூர் சாலையில் சென்றபோது திடீரென லாரியின் முன்பக்கத்தில் இருந்து கடும் புகை வெளியேறியது. இதை கண்ட வடிவேல் உடனடியாக லாரியை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு கீழே இறங்கி பார்த்தார். அப்போது லாரியின் முன் பக்கத்தில் தீ பிடித்தது தெரியவந்தது. உடனடியாக அவர் நாமக்கல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் வருவதற்குள், லாரி முழுவதும் தீ மளமளவென பரவி பற்றி எரிந்தது. பின்னர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் லாரி தீயால் சேதமடைந்தது. இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.