பள்ளி தலைமை ஆசிரியையை கண்டித்து பள்ளி நுழைவுவாயில் முன்பு அமர்ந்து மாணவ மாணவிகள் போராட்டம்
பள்ளி தலைமை ஆசிரியையை கண்டித்து பள்ளி நுழைவுவாயில் முன்பு அமர்ந்து மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் கோபனப்பள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 50 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியையாக லலிதா (வயது 56) என்பவர் இருந்து வருகிறார். நேற்று முன்தினம் கெலமங்கலம் வட்டார கல்வி அலுவலர் சதீஷ்குமார் பள்ளிகளை ஆய்வு செய்த போது தங்களுக்கு சரியாக பாடம் எடுப்பதில்லை என புகார் தெரிவித்தனர். இதனால் தலைமை ஆசிரியை பள்ளியில் உள்ள கழிவறைக்கு பூட்டு போட்டுவிட்டு மாணவர்களை வகுப்புக்கு வரக்கூடாது என திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் தலைமை ஆசிரியையை கண்டித்து பள்ளி நுழைவுவாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கெலமங்கலம் போலீசார் மற்றும் கல்வி அதிகாரிகள் பள்ளிக்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்பறைக்கு சென்றனர்.