மதத்தை அவமதித்ததாக புகார் அரசு பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டம் 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்

மதத்தை அவமதித்ததாக புகார் தொடர்பாக அரசு பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

Update: 2022-04-08 17:54 GMT
வேப்பனப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள கொரல்நத்தம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 342 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்த பெரும்பாலான மாணவர்கள் நோன்பு கடைபிடித்து வருகிறார்கள். இதனால் பள்ளிக்கு வரும் மாணவர்கள் தண்ணீரோ, மதிய உணவோ உட்கொள்வதில்லை. இதுகுறித்து பள்ளி கணித ஆசிரியர் சங்கர் மாணவர்களை சாப்பிடாமல் இருந்தால் உடல் நலம் தான் கெட்டுப்போகும் என்றும், உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் உடற்பயிற்சி செய்யும்போது சாப்பிடாமல் வந்தால் மாணவர்கள் மயக்கம் அடைவார்கள் எனக்கூறி கண்டித்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூறினார்கள்.
இந்தநிலையில் நேற்று காலை 200-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர் திரண்டு வந்து பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து வெளியே நின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயராகவன், குருபரப்பள்ளி இன்ஸ்பெக்டர் அன்புமணி, மாவட்ட கல்வி அதிகாரி பொன்முடி ஆகியோர் பள்ளிக்கு வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்களின் பெற்றோர்கள், கணித ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் ஆகியோர் தங்கள் மதத்தை அவமதித்து இழிவுபடுத்தி பேசியதாக குற்றம் சாட்டினார்கள். இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் பொன்முடி விசாரணை தொடர்பான அறிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மகேஸ்வரியிடம் அளித்தார். இதையடுத்து கணித ஆசிரியர் சங்கரை அஞ்செட்டி அருகே உள்ள கரடிக்கல் அரசு உயர்நிலைப்பள்ளிக்கும், உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமாரை தொட்டமஞ்சு உயர் நிலைப்பள்ளிக்கும் பணியிட மாற்றம் செய்து முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டார். இதையடுத்து மாணவர்களின் பெற்றோர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன் காரணமாக அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகள்