மா மகசூல் பாதிப்பு ஏக்கருக்கு ரூ25 ஆயிரம் இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை
மா மகசூல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு பெற்று தர வேண்டும் என்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.;
கிருஷ்ணகிரி:
மா மகசூல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதால் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு பெற்று தர வேண்டும் என்று விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது. இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரநிதிகள் கலந்து கொண்டு பேசினர். அப்போது விவசாயிகள் பேசியதாவது:-
இந்த ஆண்டு மா மகசூல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நோய் தாக்குதல் உள்ளிட்டவையால் விவசாயிகள் இழப்பினை சந்தித்துள்ளனர். எனவே மகசூல் பாதிப்பால் மா ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் இழப்பீடு பெற்றுத் தர வேண்டும். மாவிற்கு அரவே விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தரமான மரக்கன்றுகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இழப்பீடு
வன விலங்குகளால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக இழப்பீடு வழங்கவில்லை. 5 சதவீத பேருக்கு மட்டுமே இழப்பீடு வழங்கி உள்ளனர். எனவே, பயிர் சேதத்திற்கு உரிய இழப்பீட்டை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணகிரி அணை இடது மற்றும் வலதுபுறக்கால்வாய்கள் தூர்வாரப்படாமல் உள்ளதால், கடைமடை ஏரிக்கு தண்ணீர் செல்வது பாதிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
தொடர்ந்து கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பேசியதாவது:-
ஆக்கிரமிப்புகள் அகற்றம்
டிசம்பர் மாதம் மாமரங்களில் மா துளிர்விட்டு இருந்தது. அப்போது பெய்த மழையால், துளிர்கள் சேதமானது. இதனால் இந்த ஆண்டில் மா மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது உண்மை தான். மாவிற்கு இழப்பீடு பெற்று தர அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். வனவிலங்குகளால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படுகிறது. அணை கால்வாய்கள் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, வேளாண்மை இணை இயக்குனர் ராஜேந்திரன், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் பூபதி, மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஏஞ்சலா சகாயமேரி, தோட்ட கலைத்துறை துணை இயக்குனர் ராம்பிரசாத், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ஏகாம்பரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.