சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு: புதுக்கோட்டை நகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு

சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை நகராட்சி கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.;

Update: 2022-04-08 17:16 GMT
புதுக்கோட்டை:
அவசர கூட்டம்
புதுக்கோட்டை நகராட்சியில் நகர்மன்ற அவசர கூட்டம் நகர்மன்ற கூடத்தில் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் புதிய பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டது, நகராட்சி தலைவர், ஆணையர், பொறியாளர், நகர் நல அலுவலர் ஆகியோருக்கு புதிதாக வாகனங்கள் வாங்குவதற்கும் உள்பட சில பணிகளுக்கும் ஒப்புதல் பெறப்பட்டது. 
மேலும் நகராட்சியில் சொத்து வரி, காலிமனை வரி உயர்வுக்கு அனுமதி பெறப்பட்டது. இதில் 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீதம் சொத்துவரி உயர்வும், 601 முதல் 1,200 சதுர அடி வரை பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீத சொத்து வரி உயர்வும், 1,201 முதல் 1,800 சதுர அடி வரை பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீத சொத்து வரி உயர்வும், 1,800 சதுர அடிக்கு அதிகமாக பரப்பளவு கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீத சொத்து வரி உயர்வும் உயர்த்தப்பட்டன.
சொத்து வரி உயர்வு
இதேபோல வணிக பயன்பாடு கட்டிடங்களுக்கு தற்போது உள்ள சொத்துவரியில் 100 சதவீத சொத்துவரி உயர்வும், தொழிற்சாலை பயன்பாடு கட்டிடம் மற்றும் சுய நிதி பள்ளி, கல்லூரி கட்டிடங்களுக்கு தற்போது உள்ள சொத்துவரியில் 75 சதவீதம் வரையும், காலிமனை வரிவிதிப்பிற்கு 1 சதுர அடி நிலத்திற்கு தற்போதுள்ள அடிப்படை மதிப்பு 100 சதவீதம் உயர்வு செய்தும், ஏற்கனவே உள்ள சொத்துவரி, காலிமனை வரியில் ஆண்டுதோறும் 6 சதவீதம் உயர்வு அல்லது கடந்த 5 ஆண்டுகளின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் சராசரி வளர்ச்சி வீதம் இவற்றில் எது அதிகமோ அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் சொத்து வரி காலிமனை வரி உயர்வு செய்து சொத்துவரி சீராய்வு செய்யலாம் என பொருள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு
இந்த நிலையில் சொத்து வரி உயர்வு குறித்து பொருள் வாசிக்கப்பட்ட போது அ.தி.மு.க. கவுன்சிலர்கள் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தில் இருந்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர். அப்போது அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சொத்துவரி உயர்த்தி வசூலிக்கப்பட்டது என தி.மு.க. கவுன்சிலர்கள் தெரிவித்தனர். 
இதனால் சிறிது நேரம் பரபரப்பானது. அ.தி.மு.க. கவுன்சிலர்களை தொடர்ந்து அ.ம.மு.க.வை சேர்ந்த பெண் கவுன்சிலரும் வெளிநடப்பு செய்தார். கூட்டத்தில் துணை தலைவர் லியாகத் அலி பேசுகையில், ‘‘சொத்துவரி உயர்வு சரியாக கணக்கிடப்பட்டு உள்ளது. காமராஜபுரம், போஸ் நகரில் வரி அதிகம் உயர வாய்ப்பு இல்லை. நிஜாம் காலனி, சார்லஸ் நகர், பெரியார் நகரில் குடியிருப்பு அதிகமாக உள்ள நிலையில் அங்கு அதிகம் உயரும். வணிக வளாகங்களில் சொத்து வரி உயரும். இதில் மக்களுக்கு எதுவும் பாதிப்பு ஏற்படாது’’ என்றார்.
குடிநீர் பிரச்சினை
கூட்டத்தில் குடிநீர் பிரச்சினை தொடர்பாக தி.மு.க. கவுன்சிலர்கள் பேசினர். மேலும் குடிநீர் வினியோகத்தில் தொட்டியில் இருந்து தண்ணீர் திறந்து விடும் ஊழியர்கள் பாரபட்சமாக செயல்படுவதாகவும், மேஸ்திரிகள் மீதும் குற்றச்சாட்டை கூறி, அவர்களை பணியிட மாறுதல் செய்ய கோரினர். 
 இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் நாகராஜன் தெரிவித்தார். மேலும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட உள்ளதாகவும் அவர் கூறினார். கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
தேசிய கீதம் பாடலில் பிழை
கூட்டம் தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடலும், முடியும் போது தேசிய கீதமும் பாடப்பட்டது. அப்போது அதிகாரி ஒருவர் பாட அதனை பின்தொடர்ந்து மற்றவர்கள் பாடினர். அப்போது தேசிய கீதம் பாடல் பாடிய போது சற்று பிழை ஏற்பட்டது. 
இதனை கவனித்த சில கவுன்சிலர்கள் மற்றும் பார்வையாளர்கள் கூட்டம் முடிந்ததும் துணை தலைவரிடம் தகவல் தெரிவித்து அடுத்த முறை சரியாக பாடும் வகையில் நடவடிக்கை எடுக்க கூறினர்.

மேலும் செய்திகள்