அரசு பஸ் மீது கல் வீச்சு
தியாகதுருகம் அருகே அரசு பஸ் மீது கல்வீசிய மாணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்டாச்சிமங்கலம்,
உளுந்தூர்பேட்டை அருகே தானம் கிராமத்தில் இருந்து குன்னியூர் வழியாக நேற்று காலையில் தியாகதுருகம் நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. உதயமாம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த மாணவர்கள் பஸ்சை நிறுத்த முயன்றனர். ஆனால் கூட்டம் அதிகமாக இருந்ததால், டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் சென்றதாக தெரிகிறது.
இதனால் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவர்களில் ஒருவர் அருகில் கிடந்த கல்லை எடுத்து பஸ் மீது வீசினார். இதில் பஸ்சின் பின்புற கண்ணாடி உடைந்து நொறுங்கியது. இதுபற்றி அறிந்த தியாகதுருகம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அதில் தியாகதுருகம் பகுதி அரசு பள்ளியில் படிக்கும் 16 வயதுடைய மாணவர் கல்வீசி கண்ணாடியை உடைத்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.