கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
கள்ளக்குறிச்சி அரசு கல்லூரியில் போதிய பேராசிரியர்கள், அடிப்படை வசதி இல்லாததால் சின்னசேலம் அருகே மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே கனியாமூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கள்ளக்குறிச்சி அரசு கலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 1,500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
கல்லூரியில் போதிய அளவில் பேராசிரியர்கள் இல்லை என கூறப்படுகிறது. மேலும் கல்லூரியில் குடிநீர், கழிவறை, ஆய்வகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை எனவும் தெரிகிறது.
இதனால் மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்படும் சூழல் உள்ளதால், கல்லூரியில் பேராசிரியர்களை நியமிக்கக்கோரியும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தியும் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் நேற்று, சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கனியாமூர் பஸ் நிறுத்தத்தில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கல்லூரியில் போதிய பேராசிரியர்களை நியமிக்கக்கோரியும், அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்கள், எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற மாவட்ட கலெக்டா் வரவேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர்லால், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி, கள்ளக்குறிச்சி தாசில்தார் விஜயபிரபாகரன் ஆகியோர் விரைந்து வந்து, விரைவில் கோரிக்கையை நிறைவேற்றித்தருவதாக உறுதி அளித்தனர். இதையேற்ற மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மாணவர்களின் இந்த போராடடத்தால் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.