அகரம்சேரி தோட்டக்கலை பண்ணையில் கூடுதலாக 50 லட்சம் நாற்றுகள் உற்பத்தி செய்ய வேண்டும். கலெக்டர் அறிவுரை
அகரம்சேரி தோட்டக்கலை பண்ணையில் கூடுதலாக 50 லட்சம் நாற்றுகள் உற்பத்தி செய்ய கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிவுரை வழங்கினார்.
அணைக்கட்டு
அகரம்சேரி தோட்டக்கலை பண்ணையில் கூடுதலாக 50 லட்சம் நாற்றுகள் உற்பத்தி செய்ய கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிவுரை வழங்கினார்.
கலெக்டர் ஆய்வு
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா அகரம்சேரி அருகே 85 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலைத் துறை சார்பில் தோட்டக்கலை பண்ணை மற்றும் பல்லுயிர் பூங்கா உள்ளது. இதனை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது இந்த பண்ணையில் அமைக்கப்பட்டுள்ள 1,000 சதுர மீட்டர் நிழல் வலை குடில், மண்புழு உர கூடாரம், நீர் சேகரிப்பு அமைப்பு ஆகியவற்றை பார்வையிட்டார். கடந்த ஆண்டு இப் பண்ணையின் மூலம் 23.5 லட்சம் காய்கறி நாற்றுகள் (தக்காளி மற்றும் மிளகாய்) தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் மூலம் வேலூர் மாவட்ட விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
கூடுதலாக 50 லட்சம் நாற்றுகள்
இந்த ஆண்டு கூடுதலாக ஆயிரம் சதுர மீட்டர் பரப்பில் நிழல் வலை குடில் அமைத்து 50 லட்சம் குழித்தட்டு காய்கறி நாற்றுகள் உற்பத்தி செய்திட கலெக்டர் அறிவுரை வழங்கினார். மேலும் நடவு செய்யப்பட்ட மரக்கன்றுகளை பராமரிக்க மகாத்மா காந்தி வேலை உறுதி திட்ட பணியாளர்களை ஈடுபடுத்த அறிவுறுத்தினார்
மேலும் மூலிகை தோட்டம் அமைத்தல், பாரம்பரிய மரக்கன்றுகள் நடவு செய்தல், விதைப் பண்ணை விதை தழைகள் போன்றவைகளை அரசு தோட்டக்கலை பண்ணை மூலம் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கிட அறிவுறுத்தினார்.
பாலம் கட்ட கோரிக்கை
ஆய்வின்போது அகரம்சேரி ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றியக் குழு உறுப்பினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் கொடுத்தனர். அந்த மனுக்களில் ஆம்பூர் தாலுகா வில் இருந்து 5 ஊராட்சிகளை குடியாத்தம் தாலுகாவுக்கு மாற்றி விட்டதாகவும் இதனால் 5 ஊராட்சி மக்கள் பாலாற்றை கடந்து செல்ல மிகவும் அவதிப்பட்டு வருவதாகவும், தற்போது 9 மாதங்களாக பாலாற்றில் வெள்ளம் ஓடுவதால் ஆற்றைக் கடந்து கூட நகரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கும், மருத்துவமனைக்கும் செல்ல சிரமபட்டு வருவதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது.
மேலும் அகரம்சேரி- குடியாத்தத்தை இணைக்க அகரம்சேரி பாலாற்றின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும் எனவும், அகரம் சேரி நல்லதண்ணீர் குளத்தை தூர்வார வேண்டும், அகரம் சேரியில் ஆவம்பசுகாதார நிலையம் அமைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
ஆய்வின் போது தோட்டக்கலை துணை இயக்குனர் மோகன், வேளாண்மை துணை இயக்குனர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர், தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அலுவலர்கள், குடியாத்தம் தாசில்தார் லலிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யுவராஜ், சாந்தி ஆகியோர் உடனிருந்தனர்.