தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு பாலியல் புகார் உள்ளதா என்று 15 நாட்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும்

தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு பாலியல் புகார் உள்ளதா என்று 15 நாட்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும்

Update: 2022-04-08 16:47 GMT
திருப்பூர்
தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு பாலியல் புகார் உள்ளதா என்று  15 நாட்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்ய வேண்டும் என்று தொழிலாளர் துறைக்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமரி அறிவுறுத்தி உள்ளார். 
மகளிர் ஆணைய தலைவர் ஆய்வு
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாநில மகளிர் ஆணையத்தில் இருந்து பெறப்பட்ட மனுக்கள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்றுகாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமரி தலைமை தாங்கி ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் ஆய்வு குறித்து ஏ.எஸ்.குமரி நிருபர்களிடம் கூறியதாவது:-
அனைத்து மாவட்டங்களிலும் பெண்களின் பாதுகாப்பு, உரிமைகள் குறித்து கலந்தாய்வு செய்து வருகிறேன். அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மனநல ஆலோசனை மையம் தொடங்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டங்களை வகுத்து செயல்படுகிறார். கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கும் பெண்களுக்கான உதவி எண்.181 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 விழிப்புணர்வு
குழந்தைகளுக்கான பாலியல் தொந்தரவுகளை தடுக்கும் வகையில் 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்து பள்ளி கல்வித்துறை மூலமாக பள்ளி மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. நூற்பாலைகள் அதிகம் இங்கு உள்ளது. புலம்பெயர் பெண் தொழிலாளர்கள் அங்கு பணியாற்றி வருகிறார்கள். அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பணியாற்றும் இடங்களில் பாலியல் தொந்தரவு இருந்தால் அவர்கள் புகார் தெரிவிக்கும் வகையில் தொழில் நிறுவனங்களில் புகார் பெட்டி கண்டிப்பாக வைக்க வேண்டும். ஈரோடு, கோவை, திருப்பூர் பகுதிகளில் பெண் தொழிலாளர்கள் அதிகம் இருப்பதால் பணியாற்றும் இடங்களில் பாலியல் தொந்தரவு இருந்தால் புகார் தெரிவிக்க வசதியாக கமிட்டி உள்ளது என்பதை பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
புகார் பெட்டி
பெண்கள் முன் வந்து தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு குறித்து புகார் தெரிவிக்க வேண்டும். வேலை போய்விடும் என்று தயக்கம் காட்டக்கூடாது. புகார் பெட்டிகள் தொழில் நிறுவனங்களில் வைக்கப்பட்டாலும் கூட பெண்கள் புகார் தெரிவிக்காமல் உள்ளனர். தொழிலாளர் துறையினர் 15 நாட்களுக்கு ஒருமுறை பெண் தொழிலாளர்கள் பணியாற்றும் தொழில் நிறுவனங்களில் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போக்சோ வழக்குகள் திருப்பூரில் அதிகமாகி வருவதாக கூறினாலும் கூட, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்பதை மறுக்க முடியாது. கொரோனா காலத்தில் குடும்ப வறுமை காரணமாக பள்ளிப்படிப்பை பாதியில் மாணவிகள் கைவிட்டனர். அவர்களை திருமணம் செய்து கொடுக்க குடும்பத்தினர் விரும்பியதால் குழந்தை திருமணம் அதிகரித்துள்ளது. பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட மாணவிகள் குறித்த விவரங்களை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகிறார்கள். அதுபோல் பள்ளியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. அதன்மூலமாக சிறுவயது கர்ப்பம் கூட அறிய முடிகிறது. அதை தடுக்கும் பணியை மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செய்து வருகிறது.
1,000 வழக்குகளுக்கு தீர்வு
கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் கடந்த மார்ச் மாதம் வரை திருப்பூர் மாவட்டத்தில் உதவி மையத்துக்கு 181 இலவச அழைப்பில் 1,030 புகார்கள் வரபெற்றுள்ளன. 431 புகார்கள் குடும்ப வன்முறை தொடர்பானது. குழந்தை திருமணம் புகார்கள் 160 வந்துள்ளன. பணியிடங்களில் பெண்களுக்கு தொந்தரவு குறித்து 28 புகார்கள் வந்துள்ளன. அதில் 1,000 புகார்களுக்கு தீர்வு கண்டுள்ளனர். 30 புகார்கள் விசாரணையில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து பெண்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனு கொடுத்து முறையிட்டனர். பின்னர் திருப்பூர் மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் பெண் கவுன்சிலர்களுடன் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமரி ஆலோசனை மேற்கொண்டார். இதில் பெண் கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார் பாடி ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் கீதா, மாநகர போலீஸ் துணை கமிஷனர் ரவி, மாவட்ட சமூக நல அதிகாரி அம்பிகா உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்